செல் ‘பேசும்’ வார்த்தைகள்..!

(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு. அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. காதலன்.. அவனது செல்போன் மனம் விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.)

கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. (மெஸேஜ் ஒன்று வந்தடைகிறது.)

செல் : நிம்மதியா தூங்க உடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்னடா மெஸேஜ் வேண்டி கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய ‘சாட்’தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிச்சிட்டான்யா.. என்னைக் கையில எடுத்துட்டானே.. ஆஹா பொண்டாட்டிதான் மெஸேஜ் அனுப்பியிருக்கா! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பரை ‘பொண்டாட்டி’ன்னு ஸ்டோர் பண்ணி வைச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..

        “செல்லம் தூங்கிட்டியாடா?”

அடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம தூர்தர்ஷன்ல ஹிந்தி மெகா சீரியலாடி பாத்துக்கிட்டிருப்பாங்க! ஆஹா பதில் அனுப்பத் தொடங்கிட்டான்டா!

        “ஆமா செல்லம்! இப்பத்தான் தூங்கினேன். கனவுல நீதான் வந்த! ரெண்டு பேரும் சுவிஸ்ல டூயட் பாடிக்கிட்டிருந்தோம்”

டேய் சத்தியமா சொல்லு. உன் கனவுல அவளாடா வந்தா! கடலை முட்டாயில இருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்குன கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமிதான் வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வைக்குற!

கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்..

பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு ஒருபடி மேல படுத்துவாளே. என்ன சொல்லியிருக்கா!

        “உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?”

ஆமாடி, ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, லிப்ஸ்டிக் சரியா இருந்துச்சா, மல்லிப்பூ வைச்சிருந்தியா, ஹீல்ஸ் எத்தனை அடி உயரத்துல போட்டிருந்த எல்லாம் வரிசையாக் கேளு!

        “டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த!”

டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!

        “டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்கு! நான் என்ன பண்ண?”

ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னாடா ரொமான்ஸ் வேண்டி கிடக்கு. அடங்குங்கடா!

        “என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்மா!”

ச்சீ.. தூ.. எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதா.. அந்த இலவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னாத் தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுடுச்சின்னு வெறுப்புத்தான் வரும். லூசுப்பய! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.

        “யேய் புஜ்ஜூ, எனக்கு உன் பேரைச் சொன்னாத் தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!”

எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! ‘கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவனை விட, செல்லைப் படைத்து ப்ரீ எஸ்.எம்.எஸ்ஸைப் படைத்த மனுசன் தான் கொடியவன்’ போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல!

        “செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?”

        “உலக வங்கியில் இந்தியா வைச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?”

கடன்காரி. உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா. நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.

        “முதல் டீச்சர். முதல் சம்பளம். முதல் கவிதை. முதல் காதல்.. இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்”

டேய் அளக்காதடா! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெஸேஜத் தான நீ அனுப்புன. நடத்து. நடத்து! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!

(அரை மணி நேரம் கழித்து, அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு ‘சாட்’டை முடிக்கிறான்.)

முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி ஏதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வைக்கப் போறானா. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலேயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதான்டா! அதுவரைக்கும் ‘பொண்டாட்டி’ திருப்பி ‘சாட்’டுக்கு வராம இருந்தா சரிதான்.

(காலை பதினொரு மணி..)

அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ ஏதோ ரிமைண்டர் செட் பண்ணி வைச்சிருக்கான். அதான். என்னது..

        “இன்று திங்கள்கிழமை பல் தேய்க்க வேண்டும்”

அட நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா ‘ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்’னு தன்னைத் தானே அடிச்சுக்குவான். விட்டா ‘பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்’னு கூட ரிமைண்டர் வைப்படா நீ! டேய் எவ்வளவு நேரம் தான்டா கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்தரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆஃப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான்போல! டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க விழப்போகுது, சோம்பேறி!

(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி…’ (ரிங்டோன் ஒலிக்கிறது.)

அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான்.

“ஹலோ.. ஆங்.. குட் மார்னிங் சார்.. கண்டிப்பா.. இன்னிக்கு கண்டிப்பா முடிச்சிரலாம் சார்.. இல்ல சார்.. ஆமா கொஞ்சம் பிஸிதான்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்.. ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே.”

தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியதிருக்கே! மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு. அலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிக்கிட்டே இரு. நானும் தூங்…

(செல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிறது.)

ஆக்கம் : லொள்ளு தர்பார் – கற்பனை : முகில்

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #creative #mughil #cell pesum vaarthaigal

4 thoughts on “செல் ‘பேசும்’ வார்த்தைகள்..!

Add yours

  1. real fact nejamave ipdi oru mobile iruntha ela human beings-kum kastamtha elarum pandratha correct ah katti kuduthidum

Leave a Reply to Naveenkumar KannanCancel reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading