கதை #1 : யாவற்றிலும் பெரியது எது?

     நெடுங்காலத்துக்கு முன்பு ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்து வந்தார்கள். அவர்களிடம் ஒரு பெரிய எருது இருந்தது.

     மூன்று சகோதரர்களும் ஒரு நாள் பாகப்பிரிவினை செய்து கொண்டு தனித்தனியே வாழ்வதென்று தீர்மானித்துக் கொண்டார்கள். ஆனால் ஒரேயொரு எருதை மூவரிடத்தே பாகப்பிரிவினை செய்வது எப்படி? முதலில் அவர்கள் எருதை விற்றுப் பணத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாமா என்று ஆலோசித்தனர். ஆனால் எருதைக் கொல்ல யாருக்கும் மனம் வராமல் இந்த எண்ணத்தைக் கைவிட்டனர். மூவரில் ஒருவரிடம் எருதைக் கொடுக்கலாமென்றால், யாரிடம் கொடுப்பதென்பது குறித்து அவர்கள் உடன்பாட்டுக்கு வர முடியவில்லை.

     ஆகவே அவர்கள் ஒரு மகானிடம் சென்று இந்த விவகாரத்தைத் தீர்த்து வைக்குமாறு கேட்பதென முடிவு செய்தனர்.

     “மகான் அளிக்கும் தீர்ப்பை நாம் ஏற்று அதன்படி நடப்போம்” என்று மூவரும் கூறி எருதையும் அழைத்துக் கொண்டு மகானுடைய கிராமத்தை நோக்கிச் சென்றனர். மூத்த சகோதரன் எருதுவின் தலைப் பக்கத்திலும், இரண்டாவது சகோதரன் எருதுவின் விலாப் புறத்திலும் நடந்து அதை ஓட்ட, மூன்றாவது சகோதரன் எருதுவுக்குப் பின்னால் நடந்து கம்பால் தட்டி ஓட்டினான்.

     பொழுது விடியும் போது குதிரையில் சென்ற ஒருவன் எருதுவின் வால் பக்கத்தை வந்தடைந்தான். மூன்றாவது சகோதரனிடம் சென்று எருதுவை எங்கே ஓட்டிச் செல்கிறாய் என்று கேட்டான். மூன்றாவது சகோதரன் யாவற்றையும் விவரமாய்க் குதிரை வீரனிடம் சொன்னான்.

     “இந்த விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்காக எருதுவை நாங்கள் ஒரு மகானிடம் ஓட்டிச் செல்கிறோம், அவர் சொல்கிறபடி நடப்போம்” என்றான்.

     குதிரைவீரனுக்கு விடையளித்து அனுப்பிய அவன்-

     “விரைவில் நீ எனது இரண்டாவது சகோதரனைச் சந்திப்பாய், அவன் எருதுவின் விலாப் பக்கமாய் நடந்து செல்கிறான், அவனுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து எருதுவை வேகமாய் ஓட்டிச் செல்லும்படி நீ சொல்ல வேண்டும்” என்று குதிரைவீரனை அவன் கேட்டுக் கொண்டான். “இருட்டுவதற்கு முன்பு நாங்கள் அந்த மகானுடைய கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டும்” என்றான்.

     “சரி, அவனிடம் சொல்கிறேன்” என்று கூறி குதிரைவீரன் குதிரையை பாய்ந்தோடச் செய்தான்.

     நண்பகலில் அவன் இரண்டாவது சகோதரனிடம் போய்ச் சேர்ந்தான். இரண்டாவது சகோதரன் எருதுவின் விலாப் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தான்.

     குதிரைவீரன் அவனுக்கு வந்தனம் கூறிவிட்டு-

     “உன் தம்பி உனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடத்தை இரவுக்கு முன்பே அடையும் பொருட்டு எருதுவை நீ இன்னும் வேகமாய் ஓட்ட வேண்டுமென்று சொல்லச் சொன்னான்” என்றான்.

     இரண்டாவது சகோதரன் குதிரைவீரனுக்கு நன்றி தெரிவித்தான்.

     “எருதுவின் தலையை நோக்கி நீ செல்லுகையில் அங்கே எனது மூத்த சகோதரன் நடப்பதைக் காண்பாய், அவனுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, மகானுடைய கிராமத்துக்குச் சீக்கிரமாய்ப் போய்ச் சேர வேண்டுமென்றும், அவன் எருதுவை இன்னும் வேகமாய் ஓட்ட வேண்டுமென்றும் நான் சொன்னேனென அவனிடம் கூறு” என்று கேட்டுக் கொண்டான்.

     குதிரைவீரன் குதிரையை வேகமாய் ஓட்டினான். எருதின் தலையருகே அவன் போய்ச் சேர்வதற்குள் அந்திப் பொழுதாகிவிட்டது. அங்கே நடந்து சென்று கொண்டிருந்த மூத்த சகோதரனிடம் தம்பிகள் இருவரது வாழ்த்துக்களையும் அவர்களுடைய வேண்டுகோள்களையும் தெரிவித்தான்.

     “நான் என்ன செய்ய முடியும்? இருட்டாகிவிட்டது, எருதை நிறுத்தி இரவை இங்கேயே கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று மூத்த சகோதரன் கூறினான்.

     இவ்வாறு கூறி அவன் எருதை நிற்கச் செய்து தானும் நின்றான்.

     குதிரைவீரன் நிற்காமல் விடைபெற்றுக் கொண்டு சென்றான்.

     சகோதரர்கள் மூவரும் ஸ்தெப்பி வெளியில் இரவைக் கழித்து விட்டு பொழுது விடிந்ததும் எருதை ஓட்டிக் கொண்டு புறப்பட்டனர். அதன்பின் திடுமென ஒரு பயங்கர நிகழ்ச்சி நடைபெற்றது. மிகப் பெரிய கழுகு ஒன்று விண்ணிலிருந்து சரிந்து நகங்களால் எருதைப் பற்றிக் கொண்டு அதை மேகங்களுக்கிடையே தூக்கிச் சென்று பறந்து போய்விட்டது.

     சகோதரர்கள் மூவரும் துயருற்று வருந்தினர். என்ன செய்வது? வருந்திவிட்டு வெறுங்கையுடன் அவர்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

     எருதை நகங்களில் பற்றிக் கொண்டு விண்ணிலே பறந்த கழுகு சற்று நேரத்துக்கெல்லாம் கீழே மேய்ச்சல் வெளியில் வெள்ளாடுகள் மேய்வதைக் கண்டது. அந்த ஆடுகளிடையே மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட ஓர் ஆடு அதன் கண்ணில் பட்டது. உடனே கழுகு கீழே சரிந்து அந்த ஆட்டின் கொம்புகளில் வந்து உட்கார்ந்து எருதைக் கொத்திக் கிழித்து அதன் எலும்புகளைச் சுற்றிலும் போடத் தொடங்கிற்று.

     அப்பொழுது திடுதிப்பென மழை கொட்டவே மேய்ப்பாளன் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு தனது மந்தையுடன் இந்தப் பெரிய ஆட்டின் தாடிக்கு அடியில் வந்து நின்றான்.

     மேய்ப்பாளனுக்கு இருந்தாற் போலிருந்து கண்ணில் சுரீரென வலித்தது.

     “என் கண்ணில் துரும்பு விழுந்திருக்க வேண்டும்” என்று அவன் நினைத்துக் கொண்டான்.

     அந்திப் பொழுதில் மேய்ப்பாளன் மந்தையை ஓட்டிக் கொண்டு தன் கிராமத்துக்குத் திரும்பினான். அவனுடைய கண்ணில் மேலும் மேலும் வலி அதிகமாகிச் சென்றது. அவன் தாங்க மாட்டாமல்-

     “நண்பர்களே, வைத்தியர்களைக் கூப்பிடுங்கள்! நாற்பது படகுகளில் ஏறி அவர்கள் என் கண்ணில் சுற்றிச் சென்று அதிலுள்ள துரும்பைத் தேடி வெளியே எடுக்கட்டும்! வலி எனக்குப் பொறுக்க முடியவில்லை!” என்று கத்தினான்.

     அவன் நண்பர்கள் நாற்பது வைத்தியர்களை அழைத்து வந்து-

     “மேய்ப்பாளனின் கண்ணில் நீங்கள் படகோட்டிச் சென்று தேடிப் பாருங்கள். துரும்பை எடுத்து வெளியே போட்டு அவனுடைய வலி தீர வழிசெய்யுங்கள். கண்ணுக்குக் காயம் ஏற்படாத படி கவனமாய்ப் படகுகளை ஓட்டிச் செல்லுங்கள்” என்று அவர்களிடம் கூறினர்.

     மேய்ப்பாளனின் கண்ணில் நாற்பது வைத்தியர்கள் நாற்பது படகுகளை விட்டுச் சென்று துரும்பைத் தேடிப் பிடித்தனர். அது துரும்பல்ல, எருதின் தோள்பட்டை எலும்பு. பெரிய ஆட்டின் தாடிக்கடியில் மழைக்காக ஒடுங்கி நின்றபோது மேய்ப்பாளனுடைய கண்ணுக்குள் அந்த எலும்பு விழுந்து விட்டது.

     அதன்பின் மேய்ப்பாளனுக்குக் கண் வலி நின்றுவிட்டது. வைத்தியர்கள் எல்லோரும் அவர்களுடைய வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தனர். எருதின் எலும்பு கிராமத்துக்கு வெளியே எடுத்துச் சென்று தொலைவில் போடப்பட்டது.

     சிறிது நேரத்துக்குப் பிறகு நாடோடிகள் சிலர் அந்த எலும்பு கிடந்த இடத்துக்கு வந்தார்கள். இரவு நெருங்கி விட்டதால் நாடோடிகளது முதியவர்கள் தம்முள் கலந்தாலோசித்து, இவ்விடத்தில் தங்கி கணப்புத் தீயை மூட்டுவதென்று தீர்மானித்தார்கள்.

     “நாம் இரவைக் கழிப்பதற்கு இந்தச் சதுப்பு வெளியைத் தவிர சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை” என்று அவர்கள் அறிவித்தார்கள்.

     ஆனால் எல்லோரும் அவ்விடத்தில் அமர்ந்து தூங்குவதற்குத் தயார் செய்ததும் தரை ஆடிக் குலுங்கத் தொடங்கிற்று. நாடோடிகள் பயந்து போய் அவசரமாய் மூட்டை முடிச்சுகளைக் கட்டி வண்டிகளில் ஏற்றி குதிரைகளைப் பூட்டிக் கொண்டு அங்கிருந்து விரைந்தோடினர்.

     பொழுது விடிந்த பிறகுதான் அவர்கள் அச்சம் நீங்கி தமது முகாமை அமைத்துக் கொண்டனர். அதன்பின் முதியோர் நாற்பது குதிரைவீரர்களை பூகம்பம் ஏற்பட்ட இடத்துக்கு அனுப்பிப் பார்த்துவிட்டு வரச் சொன்னார்கள்.

     நாற்பது குதிரைவீரர்களும் அங்கு போய்ப் பார்வையிட்டார்கள். இரவில் தாம் சதுப்பு வெளி என்று நினைத்துத் தங்கிய இடம் உண்மையில் ஒரு பெரிய எருதின் தோள்பட்டை எலும்பாகும் என்பதைக் கண்டனர். ஒரு பெரிய நரி அந்த எலும்பைக் கடித்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றனர்.

     “இந்த நரிதான் எலும்பைக் கடித்து ஆட்டியிருக்கிறது, நாம் பூகம்பம் வந்துவிட்டதாய் நினைத்துக் கலங்கிப் போனோம்!” என்று அவர்கள் கூறிக் கொண்டனர். பிறகு விற்களை எடுத்துக் கணைகள் தொடுத்து நரியைக் கொன்றார்கள்.

     மடிந்து விழுந்த நரியிடம் ஓடி அதன் தோலை உரிக்க முற்பட்டனர். அவர்களால் அதன் ஒரு பக்கத்துத் தோலைத்தான் உரிக்க முடிந்தது. எவ்வளவோ முயன்றும் நரியை அவர்களால் புரட்டிப் போட முடியவில்லை. ஆகவே இன்னொரு பக்கத்துத் தோலை உரிக்காமலே தம் முகாமுக்குத் திரும்பிச் சென்றனர்.

     முகாமுக்குத் திரும்பியதும் முதியோரிடம் யாவற்றையும் சொன்னார்கள். முதியோர் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஓர் இளம்பெண் அவர்களிடம் வந்து-

     “புதிதாய்ப் பிறந்த என் குழந்தைக்கு மென்முடிக் குல்லாய் செய்வதற்காக இந்த நரித் தோலை எனக்குத் தர வேண்டும்” என்று கேட்டாள்.

     “சரி, எடுத்துச் செல்” என்று முதியோர் கூறினர்.

     அந்தப் பெண் குல்லாய் தயாரிப்பதற்காகத் தன் குழந்தையின் தலையினுடைய சுற்றளவை அளந்து கொண்டு நரித் தோலை வெட்ட ஆரம்பித்தாள். ஆனால், பாதிக் குல்லாய்க்குப் போதிய தோல்தான் இருந்ததென்பது விரைவில் அவளுக்கு தெரிந்தது. ஆகவே மீண்டும் அவள் முதியோரிடம் சென்று நரித் தோலின் மற்றொரு பாதியையும் தருமாறு வேண்டினாள்.

     அதன் பிறகுதான் நாற்பது குதிரைவீரர்களும் நரியைப் புரட்டிப் போட முடியாமல் இன்னொரு பாதித் தோலை உரிக்காமலே தாம் திரும்பி வந்தது பற்றிச் சொன்னார்கள்.

     “உன் குழந்தைக்குக் குல்லாய் தயாரிக்க ஒரு பாதித் தோல் போதவில்லை என்றால், நீதான் அங்கே போய் நரியைப் புரட்டிப் போட்டு    இன்னொரு பாதித் தோலையும் உரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவளிடம் அவர்கள் கூறினர்.

     உடனே அவள் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்த நரி கிடந்த இடத்துக்குச் சென்றாள். சிறுதும் சிரமமின்றி அவள் நரியைப் புரட்டி அதன் இன்னொரு பாதித் தோலையும் உரித்தெடுத்தாள். இரண்டு பாதித் தோலையும் கொண்டு அவள் தன் குழந்தைக்குத் தொப்பி தயாரித்தாள்.

     இப்பொழுது நாங்கள் உங்களைக் கேட்க விரும்புவது இதுதான்:

யாவற்றிலும் பெரியது எதுவென்று நினைக்கிறீர்கள்?

     அந்த எருதுவா?

     குதிரைவீரன் அந்த எருதின் வால் பக்கத்திலிருந்து தலைப் பக்கத்துக்குப் போய்ச் சேர பகற்பொழுது முழுதும் ஆயிற்று என்பதை நீங்கள் மறக்கலாகாது.

     அந்தக் கழுகா?

     எருதை அந்தக் கழுகு தூக்கிக் கொண்டு விண்ணிலே பறந்ததை மறந்துவிடாதீர்கள்.

     அந்த ஆடா?

     கழுகு அந்த ஆட்டின் கொம்புகளில் அமர்ந்துதான் எருதைக் கொத்திக் கிழித்தது என்பது நினைவிலிருக்கட்டும்.

     அந்த மேய்ப்பாளனா?

     அவனுடைய கண்ணில் நாற்பது வைத்தியர்கள் படகுகளை விட்டுச் சென்றதை மறக்க வேண்டாம்.

     அந்த நரியா?

     எருதின் தோள்பட்டை எலும்பைப் பிடித்து இழுத்து அது பூகம்பத்தை உண்டாக்கியதென்பது நினைவிலிருக்கட்டும்.

     அந்தக் குழந்தையா?

     நரியின் இரண்டு பாதித் தோலையும் சேர்த்து அக்குழந்தைக்குத் தொப்பி செய்ய வேண்டியிருந்தது உங்களுக்குத் தெரியும்.

     அல்லது இவ்வளவு பெரிய குழந்தை பெற்ற அந்தப் பெண்ணா?

     அவசரப்படாமல் நன்றாய்ச் சிந்தனை செய்யுங்கள், எங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடிகிறதா, பாருங்கள்!

மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #kids story #yaavattrilum periyadhu edhu

Read this and comment which is large..?

8 thoughts on “கதை #1 : யாவற்றிலும் பெரியது எது?

Add yours

  1. தன் குழந்தைக்காக பெரும் நரியை புரட்டி போட்டு தோல் உரித்த, நாற்பது குதிரை வீரர்கள் செய்ய முடியாததை செய்ய வைத்த அந்த பெண்ணின் தாய்மையே யாவற்றிலும் பெரிது..

    1. andha erudhoda tholpattai ezhumba oru oorathula andha nari asaikka try panni irukku..but andha kazhugu andha erudhaye thookitu vandhu full cuttu catti irukku..then andha aadu…just you can re-think about it…

  2. மேலே சிலர், விடை அந்தப் பெண் என்றும் ஆடு என்றும் பதிவிட்டிருந்தீர்கள். அந்தப் பெண் பெரியவளாக இருக்க முடியாது. அந்த ஆடே பெரியது. ஏனெனில், எருதை தூக்கி வந்த பருந்து ஆட்டின் கொம்பின் மீதே அமர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பெரிய மனிதனும் அந்த ஆட்டின் தாடியின் கீழே தன்னை மறைத்துக் கொண்டான். எனவே அந்த ஆடே யாவற்றிலும் பெரியது.

Leave a Reply to Vinothkumar BaskarCancel reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading