திருக்குறள் – தெரிந்ததும் தெரியாததும்..

இயேசு கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் திருவள்ளுவர். நடப்பாண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும். திருவள்ளுவர் ஆண்டு பற்றிய ஆய்வை 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆராய்ந்து அறிவித்தது. 1971-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தது. உலகம் முழுவதும் 35 மொழிகளுக்கும் மேல் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் 3 பால்கள், 133 அதிகாரங்கள், 1330 குறள்கள், 9310 சீர்கள், 42,914 எழுத்துக்கள் உள்ளன. 1330 குறள்களும் 71 எழுத்துக்களில் தொடங்கி 47 எழுத்துக்களில் முடிவடைகிறது. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர். 1812-ஆம் ஆண்டு ஓலைச்சுவடியில் இருந்து திருக்குறள் அச்சுக்கு கொண்டு வரப்பட்டது.

திருக்குறளை முதன்முதலில் வேற்று மொழியில் மொழிபெயர்த்தவர் இத்தாலி நாட்டை சேர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் பெரியார். திருக்குறள் நரிக்குறவர் பேசும் ‘வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மனிதன் பின்பற்ற வேண்டிய குணநலன்களாக கூறப்பட்டுள்ளவை:

அறம், அன்பு, விருந்தோம்பல், செய்நன்றி, நேர்மை, அடக்கம், ஒழுக்கம், பொறுமை, ஈகை, பிறருக்கு உதவுதல், உண்மை பேசுதல், இரக்கப்பார்வை, முயற்சி, மன உறுதி, மானத்தோடு வாழ்தல்.

மனிதன் தவிர்க்க வேண்டிய பண்புகளாக கூறப்பட்டுள்ளவை:

பொறாமை, பிறர் பொருளை கவர நினைத்தல், புறங்கூறுவது, பயன் இல்லாத சொற்களை சொல்லுதல், தீய செயல்களை செய்தல், ஊண் உண்ணுதல், திருடுவது, கோபம் கொள்வது, துன்பம் செய்வது, உயிர்களை கொல்வது, ஆசை, மறதி, சோம்பேறித்தனம், துன்பம் கண்டு கலங்குவது, கள்ளுண்பது, பிறர் மனைவியை விரும்புவது.

இதன் காரணமாகத்தான் திருக்குறளை ‘வாழ்வியல் நூல்’ என்று அழைக்கிறோம்.

குறளும் எண்ணும்…

குறளின் பல இடங்களில் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘ஒன்று’ என்று 11 இடங்களிலும்,

‘இரண்டு’ என்று 10 இடங்களிலும்,

‘நான்கு’ என்று 11 இடங்களிலும்,

‘ஐந்து’ என்று 14 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘ஆறு’ என்று ஒரே ஒரு இடத்திலும்,

‘ஏழு’ என்று 7 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘எட்டு’, ‘பத்து’, ‘நூறு’, ‘ஆயிரம்’ ஆகியவை தலா ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘கோடி’ என்ற வார்த்தையை 7 இடங்களில் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

விலங்குகளைப் பற்றி வரும் குறள்கள்…

யானை, நரி: குறள் எண் 500

யானை, முயல்: குறள்-772

யானை, புலி: குறள்-599

முதலை: குறள்-495

மான்: குறள் 1081

பறவைகள் பற்றிய குறள்கள்…

காக்கை, ஆந்தை: குறள் 481

கொக்கு: குறள் 490

மயில்: குறள் 1081

மனித உறுப்புகள் பற்றிய குறள்கள்…

தலை: குறள்கள் 488, 9, 964

முடி: குறள்கள் 964, 969

கால்: குறள்கள் 500, 840

கை: குறள்கள் 64, 178, 260, 307, 371, 593, 774, 1017

வயிறு: குறள் 412

வாய்: குறள்கள் 33, 91, 139, 159, 415, 420, 423, 424, 689, 721, 948, 959, 1001, 1100

தமிழ் எழுத்துக்கள் ‘அ’வில் தொடங்கி ‘ன’வில் முடிவடைகிறது. திருக்குறளிலும் முதல் குறள் ‘அ’-வில் தொடங்கி இறுதிக்குறள் (குறள் எண் : 1330) ‘ன்’-ல் முடிகிறது.

திருக்குறள் கருத்துகள் இல்லாத தமிழ் இலக்கிய நூல்களே இல்லை என்று சொல்லலாம்.

உதடுகள் ஒட்டாத குறள்கள்!

சொல்லும் போது உதடுகள் ஒட்டாத குறள்கள் மொத்தம் 28 இருக்கின்றன. முயற்சி செய்து பாருங்களேன்…

குறள் எண்கள்:

208, 240, 286, 310, 341, 387, 419, 427, 446, 472, 489, 516, 523, 668, 678, 679, 894, 1080, 1082, 1177, 1179, 1211, 1213, 1219, 1236, 1249, 1286, 1296

உதாரணத்துக்கு ஒன்று…

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்                                      துறந்தார் துறந்தார் துணை. (310)

வள்ளுவரின் கையெழுத்து..

திருக்குறளைப் பற்றி ஒரு வரித் துளிகள்…

  1. திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
  2. மொத்தம் உள்ள அதிகாரங்கள் – 133.
  3. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 380.
  4. திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700.
  5. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250.
  6. அதிகாரத்திற்கு பத்து விதம் மொத்தம் 1330 குறட்பாக்கள்.
  7. திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000.
  8. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194.
  9. திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
  10. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
  11. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்.
  12. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி.
  13. திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ‘ஔ’.
  14. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
  15. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
  16. அதிக இடங்களில் வரும் எழுத்து ‘ன்’ (1705 இடங்களில் வருகிறது).
  17. ஒரே குறளில் மட்டும் வரும் எழுத்து ‘ங’ (குறள் எண்: 251), ‘ளீ’ (குறள் எண்: 938).
  18. அதிக இடங்களில் வரும் சொற்கள் – ‘இல்’, ‘பொருள்’, ‘அறம்’.
  19. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
  20. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
  21. திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
  22. திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
  23. திருக்குறள் பல உலக மொழிகளில் வெளிவந்துள்ளது.
  24. திருக்குறளை ஆங்கிலத்தில் 57 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
  25. திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது ‘பற்று’ – ஆறு முறை.

மேற்கூறிய தகவல்கள் பல நூல்களிலிருந்தும், இணையதளப் பதிவுகளிலிருந்தும் சரிபார்க்கப்பட்டு எழுதப்பட்டது.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #thirukkural #thiruvalluvar #ulaga podhumarai #information

download link : https://archive.org/details/ThirukkuralThelivurai

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: