அதிசய வழக்கு விசாரணை

     முன்னொரு காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் பணக்காரன், மற்றொருவன் ஏழை.

     ஒருநாள் ஏழைச் சகோதரனிடம் இருந்த விறகு எல்லாம் தீர்ந்துவிட்டது. கணப்பு அடுப்பில் எரிக்க அவனிடம் விறகு இல்லை.  குடிசையில் ஒரே குளிராகிவிட்டது.

     அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டினான். ஆனால் விறகை வீட்டுக்கு எடுத்து வர அவனிடம் குதிரை இல்லை.

     “சகோதரன் வீட்டுக்குச் சென்று இரவல் கேட்டு ஒரு குதிரை வாங்கி விறகை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்” என்று கூறிக் கொண்டான்.

     சகோதரன் வீட்டுக்குச் சென்றான். ஆனால், சகோதரன் அவனை வேண்டாவெறுப்புடன் வரவேற்றான்.

     “இந்த ஒரு தரம் மட்டும் தருகிறேன், குதிரையை ஓட்டிச் செல், ஆனால் அளவு மீறி சுமை ஏற்றிவிடாதே” என்று சொன்னான். “இம்மாதிரி எதாவது கேட்டுக் கொண்டு இன்னொரு தரம் என்னிடம் வரலாமென நினைக்காதே. இன்று ஒன்று நாளைக்கு இன்னொன்றென நாள் தவறாமல் எதாவது வாங்க வந்துவிடுகிறாய். இப்படியே போனால் விரைவில் என்னைத் தெருவிலே போய் பிச்சையெடுக்க வைத்துவிடுவாய் நீ” என்று கடிந்து கொண்டான்.

     ஏழைச் சகோதரன் குதிரையை வீட்டுக்கு ஓட்டி வந்தான். அதன் பிறகுதான் குதிரைக்குக் கழுத்துப்பட்டை கேட்டு வாங்க மறந்துவிட்டோமென்பது அவன் நினைவுக்கு வந்தது.

     “இனி அங்கே போய்க் கேட்டுப் பயனில்லை, சகோதரன் கொடுக்க மாட்டான்” என்று  தன்னுள் கூறிக் கொண்டான்.

     ஆகவே சறுக்கு வண்டியைக் குதிரை வாலுடன் சேர்த்துக் கெட்டியாய்க் கட்டி, காட்டுக்கு ஓட்டிச் சென்றான்.

     திரும்பி வரும்போது வெட்டு மர அடிக்கட்டையில் சறுக்கு வண்டி சிக்கிக் கொண்டது. பாவம், ஏழைச் சகோதரன் அதைக் கவனிக்காமலே சவுக்கால் குதிரைக்கு ஓரடி கொடுத்துவிட்டான்.

     கோபக்கார குதிரையாதலால் அது துள்ளி முன்னால் பாய்ந்தது. அந்தோ, அதன் வால் துண்டைய்த் தனியே வந்துவிட்டது.

     பணக்காரச் சகோதரன் தன் குதிரைக்கு வால் போய் விட்டதைக் கண்டதும் ஏழைச் சகோதரனைச் சபித்து வாயில் வந்தபடி ஏசினான்.

     என் குதிரையை இப்படி நாசமாக்கி விட்டாயே! உன்னை நான் சும்மா விடப் போவதில்லை!” என்று கத்தினான்.

     ஏழைச் சகோதரன் மீது அவன் வழக்கு தொடர்ந்தான்.

     சிறிது காலமாகி, பிறகு நெடுங்காலமும் ஆயிற்று. நீதிமன்றத்துக்கு வருமாறு சகோதரர்கள் இருவருக்கும் அழைப்பாணை வந்தது.

     இருவரும் நகரத்துக்குப் புறப்பட்டனர். நடந்தார்கள், நடந்தார்கள்-அப்படி நடந்தார்கள்.

     “பணக்காரன் தொடரும் வழக்கில் எதிர் வழக்காடும் ஏழை பயில்வானுடன் மற்போர் புரியும் நோஞ்சானை ஒத்தவன்-இருவரும் தோற்க வேண்டியதுதான்; நான் குற்றவாளி என்றுதான் தீர்ப்பளிப்பார்கள்” என்று ஏழைச் சகோதரன் தன்னுள் கூறிக் கொண்டான்.

     அப்பொழுது அவர்கள் ஒரு பாலத்தின்மீது போய்க் கொண்டிருந்தார்கள். பாலத்துக்குக் கைப்பிடிக் கிராதி இல்லாததால் ஏழைச் சகோதரன் கால் வழுக்கியதும் கீழே ஆற்றில் விழுந்தான். உறைந்து கெட்டியாகியிருந்த ஆற்றில் சரியாய் அத்தருணம் பார்த்து ஒரு வியாபாரி சறுக்கு வண்டியில் தனது கிழத்தந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்று கொண்டிருந்தான். ஏழைச் சகோதரன் நேரே வியாபாரியின் வண்டியில் அந்தக் கிழவர் மீது விழுந்தான். அவனுக்குச் சிறு காயம்கூட ஏற்படவில்லை என்றாலும், கிழவர் அடிபட்டு அதே கணத்தில் இறந்துவிட்டார்.

     வியாபாரி ஏழைச் சகோதரனை விடாமல் பிடித்துக் கொண்டான்.

     “வா என்னுடன் நீதிபதியிடம் போவோம்” என்று அவன் கூச்சலிட்டான்.

     இவ்விதம் இப்பொழுது இரு சகோதரர்கள், அந்த வியாபாரி ஆக மூவரும் சேர்ந்து நகரத்துக்குச் சென்றனர்.

     ஏழைச் சகோதரன் முன்னிலும் வருத்தமுற்று, தலையைக் கவிழ்த்துக் கொண்டு நடந்தான்.

     “சந்தேகமே இல்லை, நிச்சயம் இப்பொழுது என்னைக் குற்றவாளி என்றுதான் தீர்ப்பளிப்பார்கள்” என்று தன்னுள் கூறிக் கொண்டான்.

     திடீரென அப்பொழுது சாலையிலே கனமான ஒரு கல் கிடப்பதைக் கண்டான். அதை எடுத்துக் கந்தல் துணியில் சுற்றி தன் கோட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

     “ஆட்டுக் குட்டிக்காகத் தூக்கிலே தொங்குவதற்குப் பதில் ஆட்டுக்காகவே தொங்கலாமே” என்று கூறிக் கொண்டான். “நீதிபதி நியாயமில்லாத் தீர்ப்பு அளித்து என்னைக் குற்றவாளி என்று சொல்லித் தண்டிப்பாரானால், அவரைக் கொன்றுவிடுவேன்” என்று முடிவு செய்து கொண்டான்.

     மூவரும் நீதிபதியின் முன்னால் வந்தனர். ஏழைச் சகோதரன் மீது இப்பொழுது ஒன்றுக்குப் பதில் இரண்டு வழக்குகள் வந்தன. நீதிபதி விசாரணையை ஆரம்பித்துக் கேள்விகள் கேட்டார்.

     ஏழைச் சகோதரன் கந்தல் துணியில் சுற்றிய கல்லை வெளியே எடுத்து இடையிடையே நீதிபதியிடம் காட்டி, “நீதிபதியே, தீர்ப்புக் கூறும்! ஆனால் இன்று நீதிமன்றத்துக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கிறேன் பாரும்!” என்று முணுமுணுக்கும் குரலில் சொன்னான்.

     ஒரு தரம் சொன்னான், மறு தரமும் சொன்னான், பிறகு மூன்றாம் தரமும் சொன்னான்.

     அவனைப் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி, “இந்த விவசாயி என்னிடம் காட்டுவது தங்கக் கட்டியாய் இருக்குமோ?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.

     மீண்டும் ஒரு தரம் கவனித்துப் பார்த்தார், அவருக்கு ஆசை பிறந்துவிட்டது.

     “வெள்ளியாய் இருந்தாலும் போதுமே, நிறைய பணம் கிடைக்குமே” என்று நினைத்தார்.

     ஆகவே அவர் அதற்கேற்ப தீர்ப்பளித்தார். வாலிழந்த குதிரைக்கு மீண்டும் வால் முளைக்கும் வரை ஏழைச் சகோதரனே அதை வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

     பிறகு வியாபாரியிடம் அவர், “உமது தந்தையைக் கொன்றதற்குத் தண்டனையாய் இந்த ஆளை அதே பாலத்துக்கு அடியில் பனிக்கட்டி மீது நிற்க வைத்து, பாலத்திலிருந்து அவன்மீது குதித்து, முன்பு இந்த ஆள் உமது தந்தையைக் கொன்ற அதே முறையில் இந்த ஆளை நீர் கொல்ல வேண்டும்” என்று கூறினார்.

     அத்துடன் வழக்கு விசாரணை முடிவடைந்தது.

     பிறகு பணக்காரச் சகோதரன் ஏழைச் சகோதரனிடம், “சரி, போகட்டும் போ, வாலிழந்த குதிரையே போதும்! கொடு பெற்றுக் கொள்கிறேன்” என்று சொன்னான்.

     “அது சரியல்ல, நீதிபதி அளித்த தீர்ப்பின்படியே செய்வோம். குதிரைக்கு வால் முளைக்கும் வரை அது என்னிடமே இருக்கட்டும்” என்று ஏழைச் சகோதரன் பதிலளித்தான்.

     பிறகு பணக்காரச் சகோதரன், “உனக்கு முப்பது ரூபிள் தருகிறேன், என் குதிரையைத் திருப்பிக் கொடுத்துவிடு” என்று மன்றாடினான்.

     “சரி, உன் விருப்பப்படியே செய்வோம்” என்று ஏழைச் சகோதரன் ஒத்துக் கொண்டான்.

     பணக்கார விவசாயி பணத்தை எண்ணிக் கொடுக்கவே, அவர்களுக்கு இடையிலான விவகாரம் தீர்ந்துவிட்டது.

     இப்பொழுது வியாபாரியும் இதே போல மன்றாடும் குரலில் கேட்டுக் கொண்டான். “நண்பனே, நமது விவகாரத்தை மறந்துவிடுவோம். நான் உன்னை மன்னித்து விடுகிறேன். உன்னை நான் மன்னிக்காமல் இருப்பதால் என் தந்தை உயிர் பெற்று எழுந்து விடப் போவதில்லை” என்று கூறினான்.

     “வேண்டாம், வேண்டாம், நீதிபதி அளித்த தீர்ப்பின் படியே செய்வோம். பாலத்திலிருந்து என்மீது குதி நீ.”

     “உன்னை நான் கொலை புரிய விரும்பவில்லை. நாம் இருவரும் நண்பர்களாகிவிடுவோம்; உனக்கு நூறு ரூபிள் தருகிறேன்” என்று அந்த வியாபாரி கெஞ்சினான்.

     ஏழைச் சகோதரன் நூறு ரூபிளை வாங்கிக் கொண்டு, வெளியே போவதற்காகக் காலை எடுத்து வைத்தான். அதற்குள் நீதிபதி அவனைத் தம்மிடம் வருமாறு அழைத்தார்.

     “நீ எனக்குத் தருவதாய்க் காட்டினாயே அதைத் தந்துவிட்டுப் போ” என்றார் அவர்.

     ஏழைச் சகோதரன் தன் கோட்டுக்குள் இருந்த துணி சுற்றிய கட்டியை வெளியே எடுத்தான். கந்தல் துணியை நீக்கிவிட்டுக் கல்லை நீதிபதியிடம் காட்டினான்.

     “வழக்கு விசாரணையின்போது ‘நீதிபதியே, தீர்ப்புக் கூறும், ஆனால் இன்று நீதிமன்றத்துக்கு நான் என்ன கொண்டுவந்திருக்கிறேன், பாரும்!’ என்று சொல்லி இதைத்தான் உங்களிடம் காட்டினேன். நீங்கள் வேறு விதமாய்த் தீர்ப்புக் கூறியிருந்தால் இந்தக் கல்லால் உங்களைக் கொன்று போட்டிருப்பேன்.”

     இதைக் கேட்டதும் நீதிபதி, “நல்ல வேலை வேறு விதமாய்த் தீர்ப்புக் கூறாமல் இருந்தேன், இல்லையேல் இந்நேரம் செத்துப் போயிருப்பேன்!” என்று தம்முள் கூறிக் கொண்டார்.

     ஏழைச் சகோதரன் மிகவும் உற்சாகமாய் உச்சக் குரலில் பாட்டு பாடியவாறு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #kids story #bedtime story

One thought on “அதிசய வழக்கு விசாரணை

Add yours

  1. அருமையான கதை.. செம்மையான முடிவு..ஹாஹாஹா ….

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: