பல கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தன்னுடைய திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒரு சக மனுஷி. சமைக்க, வீட்டுவேலை செய்ய, தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய என அவளை வெறும் ஒரு இயந்திரமாக மட்டுமே உபயோகிக்கும் ஆண். இப்படிப்பட்ட ஆணாதிக்க சூழ்நிலையில், மற்ற உறவினர்களின் கேலிப்பேச்சுக்கும் ஆளாக நேர்கிறது. இதற்கிடையே இரண்டு குழந்தைகள். சிறுவயது முதலே அன்பும் கனிவும் மரியாதையும் சொல்லிக் கொடுத்து அக்குழந்தைகளை வளர்க்கிறாள் அந்த அன்னை. வீட்டில் கணவனுக்கு கீழேயும் அலுவலகத்தில் மேலதிகாரிக்குக் கீழேயும் இருக்க வேண்டிய நிர்பந்தம். தன்னுடைய சுயமரியாதையை இழந்து, எளிய வாழ்க்கையைக் கூட வாழ முடியாமல் சுழலில் மாட்டி சிக்கித் தவிக்கிறாள். பிரச்சினை என்று வரும்போது நியாயத்தின் பக்கம் பேசுவதா? இல்லை பாசத்தின் பக்கம் பேசுவதா? என்று கூட புரியாமல் திணறும் அன்பு உள்ளம். வீட்டினர் எவ்வளவு கேலி செய்து அசிங்கப்படுத்தினாலும் நம்மவர்கள் என என்னும் சாமி. உறவுகளை (எடை போடத் தெரியாத) மதிக்கத் தெரிந்த உத்தமி. இவள் மட்டும் இல்லையென்றால் குடும்பம் எப்போதோ பிளவு பட்டு சூன்யமாகி இருந்திருக்கும். ஆனால், அனைத்து துன்பங்களையும் தாக்குப் பிடிக்கத் தெரிந்தவள். ஒரே குரலில் அடக்கும் கணவனிடம் சத்தமாகக் கூட பேச யோசிப்பவள். ஆணாதிக்க கணவனிடம் தன்னுடைய விருப்பத்தை அல்லது கருத்தைக் கூட சொல்ல முடியாமல் தவிக்கும் பெண். தன் குடும்பத்திற்காக தன் குழந்தைகளுக்காக அனைத்து வலிகளையும் மறைக்கத் தெரிந்தவள். தன் குழந்தைகளுக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் பதறித் துடிப்பவள். அவர்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் தியாக உள்ளம் படைத்தவள். தன்னலம் கருதாமல் மற்றவர்களின் நலனைப் பற்றியே என்றும் யோசிப்பவள். தன் மீது தவறே இல்லையென்றாலும் அனைத்தையும் தன் தலையில் போட்டுக் கொள்பவள். தனக்கென்று ஆதரவு தேடிக் கொள்ளத் தெரியாத தெய்வம்.
இப்படி பல வடிவங்களில், கடவுளே நம்மிடம் சேர்ப்பித்த மனித வடிவிலான கடவுள் தான் அன்னை. அவளைப் பாராட்டி வணங்கவில்லை என்றாலும் கூடப் பரவாயில்லை, வார்த்தைகளால் அவளை என்றும் வதைக்காதீர்கள் ஆணாதிக்க மனப்பான்மையுள்ள ஆண்களே..! அவள் மட்டும் இல்லையென்றால் நீங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை மறவாதீர்கள்.
வேலை மட்டுமே செய்யும் எந்திரமாகப் பார்க்காமல் ரத்தமும் சதையும் உள்ள சக மனுஷியாகப் பாருங்கள்.
பின் குறிப்பு: அனைத்து ஆண்களுக்கும் சொல்லப்பட்டதல்ல.
எழுத ஆரம்பித்தால் முடிக்கவே முடியாத தலைப்பு. எனவே ஒரு பக்கத்தில் முடித்துக் கொள்கிறேன்.
இது அழகாக இருக்கிறது!
நன்றி..
Super
Thanks👍🏻