இந்தப் பதிவு எழுதப்படுவதற்கான காரணத்தை முதலிலேயே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். கொரோனா வைரஸினால் என்னுடைய மனநிலை குறித்து எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம். அது உங்களது மனதையும் பிரதிபலிக்கலாம். எண்ணங்கள் செயல்படும் வேளை இது.
முதலாவதாக சுய ஊரடங்கிற்கு உத்தரவிட்ட அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக அதை முழுமையாக கடைபிடித்த பொதுமக்களுக்கும் நன்றி. ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறெல்லாம் நிகழும் என்று யாராவது சொல்லியிருந்தால் அவர்களிடம் கேலிச் சிரிப்பை சிந்திவிட்டு நகர்ந்திருப்பேன். இன்று 25 மார்ச் 2020, இந்தப் பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. இதற்கு முன்னதாக இந்தியா முழுவதும் 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கு(Janata Curfew) கடைபிடிக்கப்பட்டது. அவ்வளவு ஏன் இந்தியா முழுவதும் 19 மாநிலங்கள் முழு அடைப்பில் உள்ளது. இவையனைத்திற்கும் பொதுவான காரணம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ். பாரதிதாசன் சொன்னதுபோல் எங்கெங்கு காணினும் நீயே(சக்தியடா) என்று சொல்லுமளவுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் கொரோனா..கொரோனா..கொரோனா..
இந்நிலையில் மஞ்சள் மாநகரமான ஈரோடு கொரோனா மாநகரமாக மாறியது. மேலும், சென்னை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பெருநகர அந்தஸ்தில் சேர்க்கப்பட்டது. கொரோனாவுக்கு நன்றி..! ஈரோடு தனிமைப்படுத்தப்பட்டவுடன் என் கற்பனையும் தனித்து வளர்ந்தது. எங்கு நோக்கினும் ராணுவம், முழு கடையடைப்பு, உணவுப் பற்றாக்குறை, பூட்டிய கதவுகள், சைரன் சத்தங்கள் இவையெல்லாம் என் கண்முன் தோன்றி மறைந்தது.
முதலில் என்னைப்பற்றி சொல்லிவிடுகிறேன். நான் சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு ஆர்வலர். லைப்ரரிக்கு சென்று படித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவிய தகவல் வந்தவுடன் என் மனநிலை எப்படியிருக்கும்..? அடுத்து வைரஸை விட வதந்திகள் வேகமாகப் பரவி எனது அச்சத்திற்கு மேலும் தீனி போட்டது. கற்பனையைத் தாண்டி, அத்தியாவசியமான பொருட்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று அரசு தெரிவித்தது ஆறுதலாக இருந்தது. பின்னரும் மக்கள் அன்றாடம் மளிகைக் கடைகளில் கூட்டமாக இருப்பது மக்களின் அறியாமையையே காட்டியது. என்னைக் கேட்கலாம் உங்களுக்கு உயிர் பயம் இல்லையா? என்று. உயிர் பயம் இருப்பதினால் தான் விழிப்புணர்வைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
வைரஸினால் சாவதை விட, பயத்தினாலேயே இங்கு பாதி உயிர் போய்விடுகிறது. பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக சுய ஊரடங்கை அரசு செயல்படுத்த நினைத்தது. ஆனால், எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அரசு உத்தரவையும் மீறி அநாவசியமாக வெளியில் நடமாடிய வெகுசிலரை எண்ணி வருத்தப்படுகிறேன். போதியளவு விழிப்புணர்வு இன்னமும் நம் மக்களிடையே வரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
முதலில் வைரஸ் பரவிய நாடு சீனாவாக இருப்பினும், இறப்பு வீதம் அதிகமாக உள்ள நாடு இத்தாலியே. அதற்கு முழுமுதற்காரணம் என்ன ஆகிவிடும் என்ற நினைப்பே, அதுவே இப்போதைய இந்த சூழலுக்கு காரணம். ஆகவே அறியாமையை விலக்கி, சுயசிந்தனைகளை விடுத்து, அரசு சொல்வதைக் கேட்டு நாம் செயலாற்ற வேண்டிய நேரம் இது.
பின் குறிப்பு: பிரெஞ்சு மொழியில் ‘curfew’ என்றால் ‘நெருப்பை மூடுவது’ என்று பொருள். பின்னர் பிரிட்டிஷ் காலகட்டத்தில் ஆங்கிலத்தில் மருவி விடுதலை இயக்க வீரர்களை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு என்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டின் உள்ளே இருக்க வேண்டும். தற்போது வன்முறை அல்லது கொடிய நோய் காலகட்டங்களில் நிலைமையை சீர் செய்ய உதவும்.
#one_minute_one_book #tamil #book #review #medical #corona_virus #janata_curfew #dear_corona
Drop your Thoughts