நீங்க என்ன குப்பைத்தொட்டியா?
“குருவே என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை” என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. ‘வருத்தப்படாதே, என்ன பிரச்சினை?’ என்று கேட்டார் குரு. என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள் அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றான் வந்தவன். வந்தவனின் பிரச்சினை குருவிற்கு புரிந்தது. குரு அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தார். “அமெரிக்காவில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார். காலை நேரம் நிறைய போக்குவரத்து இருந்ததால் சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டி இருந்தது. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்ஸி ஓட்டுநர் கொஞ்சமும் பதற்றப்படவில்லை. இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் வந்து விட்டது. இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையது தான். இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுனரைத் திட்டினான். ஆனால் ஆச்சரியம்..! பதிலுக்கு டாக்ஸி ஓட்டுநர் அவனைத் திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார். இதேபோல் இன்னொரு சம்பவம். அதிலும் டாக்ஸி டிரைவர் பொறுமை இழக்கவில்லை. ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார். இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு. இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார். ‘எப்படி இவ்வளவு பொறுமையாய், யாருடைய திட்டையும் பொருட்படுத்தாமல் வண்டி ஓட்டுகிறீர்கள்?’ அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுநர், ‘என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது அதனால் வீதியில் போவோர் வருவோர் அள்ளிக் கொட்டும் குப்பைகளை எல்லாம் என் மனதில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் நாம் போய் சேரவேண்டிய இடத்தை அடைய முடியாது”. இந்த சம்பவத்தை குரு சொன்னதும், தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது. ஆமாம் நண்பர்களே, நம்மில் பலரும் வாழ்க்கையில் சிறுசிறு பிரச்சினைகளைப் பார்த்து இலக்கை கோட்டைவிட்டு விடுகிறோம். நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் கொஞ்சநஞ்ச இடஞ்சல்கள் அல்ல.
#one_minute_one_book #tamil #book #review #moral_story #motivational_story
Nice story 👌
Thanks 👍🏻