இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?

நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் பெருகிவரும் இந்த சூழலில் வளரும் சில சிறார்களும் அதையே பின்பற்றி குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு (IPC) 392-ன் படி திருட்டில் ஈடுபடும் நபருக்கு பத்தாண்டுகள் முதல் பதினான்கு ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனையும், குற்றத்திற்கேற்ப அபராதமும் விதிக்கப்படும். ஆனால், இதே குற்றத்தை 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறார்கள் செய்தால்…?

நம் நாட்டில் சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசாங்கம் அவர்களை சிறைக்கு அனுப்பாமல் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு(கூர்நோக்கு இல்லம்) அனுப்புகிறது. ஆனால், சிறுவர்களுக்கு அதிகபட்ச தண்டனை இல்லாததால், அவர்களை கருவிகளாக்கி தங்களது தேவைகளுக்கு சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. சீர்திருத்தப் பள்ளியில் தண்டனைக் காலம் முடிந்து வெளியே வரும் சிறார்கள் எப்படி இருப்பார்கள்..?

தண்டனை பெற்று பள்ளிக்கு வரும் சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கு கல்வியும், தொழிற்பயிற்சியும், இசைப்பயிற்சியும் வழங்கப்படுகிறது. இங்கிருந்து வெளியே வரும் சிறுவர்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. இச்சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளியேறி தற்போது நல்ல நிலைமையில் இருக்கும் சிறுவர்களைப் பற்றியும், இன்னும் அதே கெட்ட எண்ணத்தோடு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பற்றியும் அனுபவத்தோடு எழுதி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

சீட்டுப்போடுதல் எனும் முறைப்படி ஏதேனும் ஒரு மாணவனை சிலமணிநேர ஆசிரியராக நியமிப்பது ஒருபக்கம் நம்மை வியக்க வைத்தாலும், அந்த கூர்நோக்கு இல்லத்தில் நிகழும் பாலியல் குற்றங்கள் (விடுதியில் ஒரு சிறுவன் மீது மற்ற சிறுவர்கள்) நமக்கு  கண்ணீரை வரவழைக்கிறது. இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரிக்குப் பின்னால் இருக்கும் உண்மை  நம்மையும் அறியாமல் மனதில் ஒரு கனத்தை ஏற்படுத்திச் செல்லும்.

எவ்வாறெல்லம் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்..? இவர்களின் பின்னால் இருந்து இயக்குவது யார்..? எந்தக் காரணங்களால் சிறுவர்கள் குற்றம் செய்கின்றனர்..? இதை எப்படி தடுப்பது..? கோபத்தில் தவறு செய்தவர்களை ஆசிரியர் திருத்தும் விதம் இவை இப்புத்தகத்தின் தனித்துவத்தையும்  மேன்மையையும் விளக்கிச் சொல்கிறது.

இளங்குற்றவாளிகள் உருவாக, அவர்களின் சூழ்நிலை, மரபு நிலை, பெற்றோர்கள், பெண்கள், திரைப்படத்தாக்கம், போதைப்பழக்கம், காதல் மயக்கம் போன்றவற்றைக் காரணங்களாகக் கூறுகிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர் இலக்கிய மாமணி முளங்குழி பா.இலாசர் அவர்கள்.

#one_minute_one_book #tamil #book #review #juvenile_care_home #thattapparai #real_events #paa_ilasar #ilam_kutravaaligal_uruvaavadhu_yen

want to buy : https://www.amazon.in/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-Tamil-ebook/dp/B07HHF7VYH

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: