பட்டாம்பூச்சியின் தூது

அன்புள்ள வாசகர்களுக்கு,

நீங்கள் நலமாக உள்ளீர்களா? நானும் நலம் தான். ‘நான் நலம்’ என்றாலே பலருக்கும் மனதில் இவன் நன்றாக இருக்கிறான் போல..?!! என்ற சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. நலம் என்பது மனதில் கிடைக்கின்ற நிரந்தரமற்ற திருப்திதானே தவிர அது ஒரு நபரின் வாழ்க்கையை குறிக்காது.

இன்றைக்கு பல இளைஞர்கள், “நான் நலமாக உள்ளேன்” என்று சொல்லவே தயங்குகின்றனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன – பலர் படிக்கின்ற காலத்தில் கவனம் சிதறி வாழ்க்கையை இழக்கின்றனர், பலர் என்ன செய்ய போகிறோம்..? என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே பதிலைத் தேடாமல் விட்டுவிடுகின்றனர், சிலருக்கோ வேலை கிடைத்தும், “ஐயோ வேலைப்பளு அதிகமாக இருக்கிறதே!” என்று சலித்துக் கொள்கின்றனர். இப்படி இளைஞர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்..! பிரச்சனைகள் எத்தனை இருந்தாலும் சரி, இளைஞர்கள் அதற்கான தீர்வாகக் கருதுவது என்னமோ தற்கொலை தான்..!

இதையெல்லாம் சொல்லி நீ எங்களைத் திருத்தப்போகிறாயா..? முதலில் நீ ஒழுங்கா..? என நீதிமன்றத்தில் எதிர் வழக்கறிஞரை மடக்குவது போல சிலர் திருத்த முயல்பவரையும் வாயைமூட செய்து விடுகின்றனர். தவறுகளைத் திருத்தவேண்டும் என்ற எண்ணம் ஒருவனுக்கு வந்துவிட்டது என்றால் அவன் தான்செய்த தவற்றை உணர்ந்துவிட்டான் என்றுதானே அர்த்தம்..!

நான் ஒன்றும் விசித்திர பிறவி கிடையாது. “நான் யார்..?” என்ற கேள்விக்கு விடைதேடிக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவன்தான் நான். ஆனால், என்னால் உங்களுக்கு இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண சரியான வழியைக் காட்ட முடியும்!

என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கதையாக சொல்கிறேன் கேளுங்கள்..

மூன்று வருடங்களுக்கு முன்பு, என் கல்லூரி வாழ்க்கை முடியும் தருவாய் அது. எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்த எனக்கு ஒரு பேரிடியாக இருந்தது என் தந்தையின் மரணம். “ஒரு மரத்தின் ஆணிவேர் இல்லை என்றால் அது கண்டிப்பாக குடைசாய்ந்து விடும்”. அதுபோல தான் எங்கள் வீட்டின் நிலைமையும். என் தாயையும் தங்கையையும் பார்க்கவேண்டிய பொறுப்பு என்னிடம் வந்தது. “ஒரு தேரை ஓட்டிச் செல்ல குதிரையே இல்லாதபொழுது, தேரோட்டி இருந்து என்ன பயன்..?” அந்த நிலைமையில் தான் நான் அப்போது இருந்தேன். வேலை இல்லை, அடுத்த வேலை சாப்பாடே கேள்விக்குறியானது..! ஏதோ என்னுடைய தாய் சிறுசிறு வேலைகளைச் செய்து  எங்களுக்கு உறுதுணையாக இருந்தாள்.

சொந்தங்கள் எல்லாம் ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் அவர்களின் பெருமைகளைக் கொட்டிகொண்டு இருந்தார்கள் (ஒரு வேலை அந்த நேரத்தில் அவர்கள் கூறியது எனக்கு அப்படி இருந்திருக்கும் போல..!). எனக்கு நம்பிக்கையாகத் தோள்கொடுக்க நண்பர்கள் கூட இல்லை. “அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கத் தானே செய்யும்” என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். என் தாயின் அன்பார்ந்த வார்த்தைகள் தான் எனக்கு ஒரு ஆறுதலாக  இருந்தது.

பல நிறுவனங்களுக்கு என்னுடைய CVயை (curriculum vitae)  அனுப்பி வைத்தேன். நேர்காணலில் பங்கேற்றேன், ஆனால் எனக்கு கிடைத்த பதில் ‘You are Rejected’. ஒவ்வொரு தடவை இதைக் கேட்கும்போதும் என் மனவேதனை அதிகமாகிக்கொண்டே இருந்தது.

பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்த குளங்கள் எல்லாம் அப்போது எனக்கு நரகத்துக்குச் செல்லும் வாசல்களாகத் தெரிந்தன. மொட்டைமாடியில் நின்றுகொண்டு குதித்துவிடலாமா..? என்றுகூட யோசித்ததும் உண்டு. ஒருமுறை முயற்சிப்போம்..இன்னொருமுறை முயற்சிப்போம்..என்று மனதைத் தேற்றிக்கொண்டு இருந்தேன். ஆனால், போகப்போக ‘முயற்சி என்ற வார்த்தை எனக்கு வெறும் எழுத்துக்களாக, பொருளற்ற சொல்லாக மாறிப்போனது’.

இவ்வாறு என் வாழ்க்கை சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒருநாள்  ஏதோ ஒரு நம்பிக்கையில் அன்றைக்கு ஒரு நிறுவனத்தில் நடந்த நேர்காணலில் கலந்துகொண்டேன். ஆனால், எப்போதும் போல் ஏமாற்றம்தான். மனம் வெறுத்துபோய் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தேன்.

என் வீட்டை அடைய ஒரு தோட்டத்தைக் கடந்துசெல்ல வேண்டும். அன்றைக்கும் அவ்வாறே சென்றேன். அவ்வாறு சென்றுகொண்டிருந்தபொழுது மெல்ல காற்றடித்தது. அன்றைக்கு வழக்கத்துக்கு மாறாக ஒரு இடம் என் கவனத்தை ஈர்த்தது – அது அந்தத் தோட்டத்தின் இறுதியில் அமைந்திருந்த ஒரு கிணறு. என் கால்கள் என்னை அறியாமலேயே அந்தக் கிணற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தது. ஏதோ ஒன்று என்னை வசியப்படுத்தி கிணற்றுக்குள் இருந்து என்னை “வா..வா…” என்று அழைப்பது போல இருந்தது. என் கைகளில் இறுக்கமாகப் பிடித்திருந்த file நழுவிக் கீழே விழுந்தது. நான் தொடர்ந்து அந்த கிணற்றின் திசைநோக்கி நடந்து கொண்டே இருந்தேன்.

தன்னை ஈன்ற மரத்திற்காக, தன்னை உணவாக அர்ப்பணித்த பச்சை நிற இலைகள் எல்லாம் காய்ந்துபோய், மரத்தின் அடியே வீழ்ந்துகிடந்தன. அதனால் நான் ஒவ்வொரு அடிஎடுத்து வைக்கும்போதும் ‘கார்க்…கார்க்…’ என்ற  சத்தம் கேட்டது. அப்பொழுதும் என் கவனம் சிதறவில்லை. என் கவனம் முழுவதும் அந்த கிணற்றை நோக்கியே இருந்தது.

அப்போது திடீரென்று என் கண்ணில் தூசி விழுந்தது. அதனால் என் கண்ணை கைகளால் கசக்கிக்கொண்டே கீழே குனிந்தேன். என்னுடைய ஒரு கால் தரையிலும், மற்றொரு கால் அந்தரத்தில் இருந்தது. அந்தரத்தில் இருந்த காலின் அடியே காய்ந்த இலைகளுக்கு நடுவே ஏதோ அசைவதுபோலத் தெரிய, இரண்டடி பின்னால் சென்றேன். ஒருவேளை பாம்பாக இருக்குமோ..? என்று அச்சப்பட்டேன்.

ஆனால் காய்ந்த இலையின் நிறத்தில் இறக்கை கொண்ட ஒரு பட்டாம் பூச்சி இருந்தது. அதன் இறக்கை சற்று உடைந்து இருந்தது. அதனால் அது பறக்கமுடியாமல் கீழே வீழ்ந்து கிடந்தது. உடனே என் கண்கள் கிணற்றைப் பார்த்தது. ‘சாவதற்கு முன் ஏதேனும் ஒரு நன்மை செய்தோம் என்றால் அது மறுபிறவியில் பலன் குடுக்கும்’ என்பார்கள். ஒருவேளை எனக்கு மறுபிறவி இருந்தால்..? என்று எண்ணிக்கொண்டே அந்த பட்டாம் பூச்சியைப் பார்த்தேன்.

பின் அதனை அருகில் இருந்த மரக்கிளையில் ஏற்றிவிட முடிவு செய்தேன். அதனைக் கையில் தூக்க முயன்றேன். ஆனால், அதுவோ என் கையைக் கங்கு போலக் கருதியதோ என்னமோ, உடனே அது தன் இறக்கையை அடித்துக் கொண்டு துடிக்க ஆரம்பித்தது. நானும் எவ்வளவோ பொறுமையாக அதைப் பிடிக்க முயன்றேன். ஆனால் அது என் கையில் ஏற மறுத்தது.

பின் வேறு வழியில்லாமல் அதனை வலுக்கட்டாயமாக என் இரு உள்ளங்கையையும் வைத்துப் பிடித்தேன். Tom & Jerry-யில் Tom – Jerry-யைத் தன் இருகைகளால் பிடித்துத் தன் ஒற்றை கண்ணை வைத்து, Jerry தன் உள்ளங்கையில் என்ன  செய்கிறது என்று பார்ப்பது போல நானும் அந்த பட்டாம் பூச்சி என்ன  செய்கிறது..? என்று பார்த்தேன். சிறையில் அடைபட்ட பறவை போல் அது என் இரு கைகளுக்கு நடுவே துடித்துக் கொண்டு இருந்தது.

பின் மெல்ல என் கைகளைத் திறந்தேன். உடனே அது என் கையில் இருந்து குதிக்கமுயல, என் மறுகையால் அதைப் பிடித்தேன். பின் மறுபடியும் அந்தக் கையில் இருந்து குதிக்கமுயல அதை மீண்டும் பிடித்தேன். இவ்வாறு சில நேரம் அதனுடன் விளையாடினேன். பின் அதுவும் சோர்ந்து போனது. வேறு வழி இல்லாமல் என் உள்ளங்கையிலேயே அமர்ந்துகொண்டது. ஒரு வேலை அதற்கு என் கை பழகிவிட்டது போல..!

பின் அதைக் கையில்  ஏந்தியபடி காய்ந்த இலைகளுக்கு மத்தியில் அமர்ந்தேன். அந்த பட்டாம் பூச்சி என் கையில் தன் உடைந்துபோன றெக்கையை மெல்ல ஆட்டியபடி அமர்ந்திருந்தது.

பின் அதனுடன் நான் பேச ஆரம்பித்தேன். ‘நம்ம ரெண்டு பேரு தலையெழுத்தையும் பாத்தியா..? உனக்கு றெக்கை உடைஞ்சு போச்சு, எனக்கோ வாழ்க்கையே முடிஞ்சிபோச்சு, இல்ல முடிஞ்சு போகப்போகுது. உன்ன மட்டும் பாக்கலைனா நான் இந்நேரம் அந்த கிணத்துல மிதந்திருப்பேன். உன்னையும் சாகடிச்சிருப்பேன். அந்தத் தூசி என் கண்ணுல விழுந்ததுனால தான் நீயும் நானும் இப்போ உயிரோடயே இருக்கோம்..! உனக்கும் எனக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது போல, யாரோ நம்ம ரெண்டு பேரையும் பாத்துகிட்டே இருக்காங்க. அப்படிதான் எனக்கு தோணுது நாம என்ன செய்யணும் செய்யக்கூடாதுனு யாரோ தீர்மானிக்கிறாங்க. உன்ன இப்போ நான் காப்பாத்துனாலும் ஒரு பிரயோஜனமும் இல்ல, ஏன்னா இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு நீ இறந்துடுவ’, என்று அதனுடன் பைத்தியம் போல் பேசிவிட்டு அந்த கிணற்றைப் பார்த்தேன். என் மனஅழுத்தம் என்னும் பேய் அந்தக் கிணற்றில் இருந்து என்னை ‘வா…வா…’ என்று கூப்பிட மீண்டும் நான் வசியப்பட்டேன்.

என் கையில் இருந்த பட்டாம் பூச்சியை மரக்கிளையில் இறக்கிவிட்டு, நான் என் உயிரையும் இறக்கிவைக்க முடிவு செய்தேன். அந்தப் பட்டாம் பூச்சியை மரத்தில் ஏற்றிவிட முயன்றேன். ஆனால் அது என் கையில் இருந்து இறங்க மறுத்தது. நானும் அதை இறக்கிவைக்கப் பலமுறை முயற்சித்தேன். ஆனால், அது மீண்டும் மீண்டும் என் கையில் ஏறிக்கொண்டது. நான் ஆச்சரியப்பட்டேன், ‘முதலில் என் கையில் ஏற மறுத்த பட்டாம் பூச்சி இப்போது என் கையைவிட்டு இறங்க மறுக்கிறது. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. பிரச்சனையில் இருந்த பட்டாம் பூச்சியைப் பாதுகாக்க தான் அதைத் தூக்க முயன்றேன். ஆனால் அது என் கையைத் தான் பிரச்சனையாகக் கருதியது. நான் அதைக் காக்க முயல்கிறேன் என்ற விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, அதுக்கோ நான் அதை ஏதோ செய்ய முயல்கிறேன் என்று அச்சப்பட்டது. இவனிடம் மாட்டிக்கொள்வதை விட மரணிப்பதே மேல் என்று பலமுறை கீழே விழ முயன்றது; என்னிடம் போராடியது; என்னை விடு என்று எனக்குப் புரியாத பாஷையில் கூறியது; பின் இவனுடன்(பிரச்சனையுடன்) போராடுவதை விட எதிர்ப்பதே மேல் என்று கருதி, முதலில் பிரச்சனையாக கருதிய என் கையையே இப்போது இறுக்கிப் பிடித்துகொண்டு விடவில்லை.’

‘ஒருவேளை என்னைத் தற்கொலை செய்யாதே.. என்று தடுக்க தான் என் கையைப் பிடித்துள்ளதோ என்னமோ. பின் தான் வாழ்க்கையின் பெரும் ரகசியம் எனக்குப் புரிந்தது. உலகில் உள்ள எல்லா உயிரினமும் ஒன்றிற்கொன்று தொடர்பு உள்ளது என்பது தான் அது. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கடமை கொடுக்கப்பட்டுள்ளது போல, அது முடியும்வரை நாம் இறப்பது சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது. பட்டாம் பூச்சிக்கு அதனுடைய கடமை என்னைக் காப்பது தான் போல’ என்று நான் என்றுமே யோசித்து பார்க்காத பல தத்துவங்கள் மழைபோல கொட்டியது. மீண்டும் அந்தக் கிணறு என்னை வசியப்படுத்தி இழுக்க ஆரம்பிக்க, உடனே அந்தப் பட்டாம் பூச்சியை மரத்தில் இறக்கிவிட்டு விட்டு (இந்தமுறை அந்தப் பட்டாம் பூச்சி வேகமாக இறங்கிக் கொண்டது..!) வேகமாக எனது file-யையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்!

இரவு நேரம்.. வீட்டின் மொட்டைமாடியில் என் மடிக்கணினியுடன் அமர்ந்துகொண்டு வானத்தில் இருந்த முழுநிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்து, “என் நண்பா..!(கடவுள்) நான் எல்லாத்தையும் புரிந்துகொண்டேன். எனக்கு என்ன செய்யவேண்டும் வேண்டும் என்றே  தெரியவில்லை. குழம்பிப் போய் இருக்கிறேன். எனக்கு ஏதாவது கடமை இருந்தது என்றால் அதையாவது எனக்குக் காட்டு. எனக்கு இப்போது புது நம்பிக்கை பிறந்துள்ளது உன்மீதும் என்மீதும்..! மீண்டும் என்னை ஏமாற்றிவிடாதே” என்றுகூறி முடிக்க,  சட்டென்று ஒரு எரிநட்சத்திரம் பிரகாசமாக நிலவுக்கு அருகில் மேல் நோக்கி சென்றதைப் பார்த்தேன். திடீரென்று என் மடிக்கணினியில் இருந்து ஒரு சத்தம் வந்தது(message).  அது எனக்கு வந்த  ஒரு மின்னஞ்சல். அதில் ‘YOU ARE SELECTED!’ என்று வந்திருந்தது ஒரு நிறுவனத்திடம்  இருந்து. என்னுடைய மகிழ்ச்சியை அப்போது அடக்கவே முடியவில்லை..!

கதை அவ்வளவு தான். இதெல்லாம் ஒரு கதையா..? என்று கேட்பீர்கள் என்றால், ஆம்.. இது கதை அல்ல.. உண்மை. அது உங்கள் வாழ்க்கையில் உணர வேண்டிய பல இரகசியங்கள். ஆகையால், பொறுமையாக இருங்கள் “இந்தக் கதையில் வந்ததுபோல் எல்லோருடைய வாழ்விலும் பட்டாம் பூச்சி வருமா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களுக்கான பட்டாம் பூச்சியாக வந்துள்ளேன்..!

நன்றி!

இப்படிக்கு,

உங்களுள் நான்.

கடிதத்தில் இல்லாத மற்றொரு பக்கம்:

அந்த இரவுநேரத்தில் அந்தத் தோட்டம் மை இருட்டாக இருந்தது. ஆனால் திடீரென்று ஒரு மரத்தில் மட்டும் பிரகாசமான ஒளி தெரிந்தது. அது வேறு ஒன்றும் இல்லை, அந்தப் பட்டாம் பூச்சிதான் தங்க நிறத்தில் ஜொலிக்க ஆரம்பித்தது..! அதன் உடைந்த இறக்கைகள் மீண்டும் வளர்ந்து பெரிய இறக்கைகளாக மாறின. கீழே காய்ந்துபோய் இருந்த இலைகள், அந்தப் பட்டாம் பூச்சியிடம் இருந்து வந்த ஒளியால் பச்சைநிறமாக மாறின..! பின் அது தனது நீண்ட தங்க நிறத்தில் உள்ள இறக்கைகளை மெல்ல அசைத்து பறக்க ஆரம்பித்தது. உயரம் செல்லச்செல்ல அதன் வேகம் அதிகரித்தது(அது சாதாரண பட்டாம் பூச்சிபோல் செல்லவில்லை, பறவைபோல் வேகமாகப் பறந்து வானத்தை நோக்கி சென்றது). நிலவிற்கருகில் சென்றபொழுது ஏதோ எரிநட்சத்திரம் செல்வது போல இருந்தது(அதை தான் அவன் நிலவிற்கருகில் பார்த்திருப்பான்).

வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழும். அது உடைந்த இறக்கையாகவே இருந்தாலும் நம்பிக்கை இருந்தால் மீண்டும் வளரும். அதன் பிரகாசத்தை யாராலும் பார்க்கமுடியாது, அதன் வேகத்தை யாராலும் முறியடிக்க முடியாது

நம்பிக்கையுடன் இருங்கள்!

-செ. தனீஸ்வரன்

#one_minute_one_book #tamil #book #review #motivational_story #se_dhanishwaran #pattampoochiyin_thoodhu

4 thoughts on “பட்டாம்பூச்சியின் தூது

Add yours

  1. உன்னுடைய எழுத்துகளில் பலம் உண்டு. பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: