Spoiler Alert..!
பொன்னியின் செல்வனுக்கு பிறகே இந்தப் புத்தகத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சூழ்நிலை காரணமாக உடனே எழுத வேண்டியதாகிவிட்டது. இதுவரை பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிக்காத வாசகர்கள், அதை முடித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அருண்மொழிவர்மன் தன்னுடைய சித்தப்பாவிற்கு முடிசூட்டியவுடன் அவரை, கடல் கடந்த நாட்டிற்கு சிலகாலம் அனுப்பி வைக்கிறாள் குந்தவை. அந்த நேரத்தை உபயோகப்படுத்தி நடக்கும் சில சம்பவங்களும் அருண்மொழி நந்திபுரம் வந்தபிறகு நிகழும் சில சம்பவங்களுமே இந்தக் கதை.
ஆதித்த கரிகாலரைக் கொலைசெய்த காரணத்திற்காக பத்தாண்டுகளாக வல்லவரையன் வந்தியத்தேவன் சிறையில் இருப்பதாகக் கதை தொடங்குகிறது. பல்லவ மன்னனின் சதியால் சிறைவாசம் இருக்கும் வந்தியத்தேவனை எண்ணி மனவேதனையில் இருக்கிறாள் குந்தவை. இதையும் தாண்டி குந்தவையை அடைய பல்லவ மன்னன் பார்த்திபேந்திரன் நிறைய சூழ்ச்சி செய்கிறார்.
சிறையிலோ வந்தியத்தேவனுக்கு ஒரே ஆறுதலாக கண்டரன் மதுரன் இருக்கிறான். இதற்கிடையே வந்தியத்தேவனை சந்திக்க எண்ணுகிறாள் குந்தவை. ஆனால், அந்தப் பாதாள சிறைக்குள் செல்லும் தைரியம் இதுவரைக்கும் யாருக்கும் வந்ததில்லை எனலாம்.
இந்த விவரங்கள் எதுவும் அறியாத அருண்மொழி வைரவியாபாரி போல் வேடமணிந்து முல்லைத்தீவை அடைகிறார். அதே கப்பலில் அவரைப் பின்தொடர்கிறான் பாண்டிய நாட்டு ஆபத்துதவி ரவிதாசன். திட்டமிட்டு அவரைக் கொன்றுவிட்டு, ஆபத்துதவிகள் இத்தனை ஆண்டுகளாக வளர்த்து வைத்துள்ள பாண்டிய இளவரசனை அரியணை ஏற்றிவைக்கத் சதித்திட்டம் தீட்டுகிறான்.
முல்லைத்தீவில் அருண்மொழி இன்பவல்லியை சந்திக்கிறார். இருவருக்குமிடையில் ஒரு இனம்புரியாத அன்பு வளர்கிறது. அதேவேளையில் சிறையில் வாடும் வந்தியத்தேவன் திடீர் திருப்பமாக விடுவிக்கப்படுகிறான்.
அடுத்தடுத்து அருண்மொழி பழையாறை திரும்புதல், அருண்மொழி-வானதிக்கு பிறக்கும் ஆண் குழந்தை, வந்தியத்தேவன்-குந்தவை திருமணம், அருண்மொழியைத் தேடும் இன்பவல்லியின் பயணம், ராஜராஜ சோழனின் கனவு ஆலயம்-தஞ்சை பெரிய கோவில் அமைத்தல், நந்தினியின் ரீஎன்ட்ரி, நந்தினியின் திட்டம், பாண்டிய இளவரசன் சேர மன்னர்களுடன் சேர்தல், இடையிடையே வந்து நம்மை மிரட்டிச் செல்லும் காளமுகர் என பொன்னியின் செல்வனில் நாம் சந்தித்த கதாப்பாத்திரங்களுடன் தன்னுடைய சில கற்பனைப் பாத்திரங்களையும் சேர்த்து நந்திபுரத்து நாயகியைத் தொகுத்திருக்கிறார் கலைமாமணி ஆசிரியர் விக்கிரமன்.
மேலும் இந்தப் பதிவை நான் முக்கியமான கதாப்பத்திரங்களை மட்டுமே வைத்து எழுதியுள்ளேன். இந்தப் புத்தகம் வாசகர்களின் வாசிப்புக்கு விருந்தாக இருக்கும்.
#one_minute_one_book #tamil #book #review #epic #kalaimamani_vikraman #nandhipuratthu_nayagi
Leave a Reply