நிழலின் நிறம் சிவப்பு..?!

ஸ்டெனோவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யாவைப் பெண் பார்க்க வந்திருந்தவர்கள் அளவுக்கு அதிகமாக வரதட்சணை கேட்க, மாப்பிள்ளை வீட்டாரிடம் பாக்யா சண்டை போட, பார்த்துக்கொண்டிருந்த அவளின் அம்மா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே மடங்கி விழுகிறாள்.

பாக்யாவின் அம்மாவிற்கு உடனடியாக இருதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல். ஆபிசில் முதலாளி ரகோத்தமராவிடம் கடனாகப் பணம் கேட்கப் போன பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. வயதான தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே பண உதவி கிடைக்கும் என முதலாளி சொல்ல..பாக்யா செய்வதறியாமல் திகைக்கிறாள்.

திருமணத்திற்கு சம்மதித்த பிறகே முதலாளி ஒரு சைக்கோ என்ற திடுக்கிடும் தகவல் ரகோத்தமராவின் பிஏ திவாகர் மூலமாக பாக்யாவிற்கு தெரியவருகிறது. இந்நிலையில் பாக்யா இந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்க திவாகர் ஒரு ரூட் போட்டுக் கொடுக்கிறான்.

புதிதாகத் திருமணமான சுபாகர்-மிருதுளா இருவரும் தேனிலவிற்காகக் கொடைக்கானல் செல்கின்றனர். சுபாகர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் அவனுடைய நண்பன் சித்தேஸ்வரனை சந்திக்க நேரிடுகிறது. அவனுடைய நண்பன் மூலமாக தன்னுடைய கணவர் கோமதி என்ற பெண்ணை ஏமாற்றிய விஷயம் மிருதுளாவின் காதில் விழுகிறது.

சுபாகரிடமிருந்தே உண்மையைத் தெரிந்துகொண்ட மிருதுளா அந்த நிமிடமே அவனை விவாகரத்து செய்ய முடிவெடுகிறாள். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிரா..என்று கொதித்த சுபாகர் மிருதுளாவைத் திட்டமிட்டு கொலைசெய்துவிட்டு அதைத் தற்கொலை போலச் சித்தரிக்கிறான்.

சொத்தில் பங்கு கேட்க பெரியப்பா ரகோத்தமராவின் வீட்டுக்குப் போன சுபாகர், அவருக்கு இன்சுலின் ஊசியைப் போடப் போக நெஞ்சைப் பிடித்துக்கொண்டே உயிரை விடுகிறார் ரகோத்தமராவ். அந்த நேரம் பார்த்து ராவை சந்திக்க வந்த வக்கீல் போலீசிற்குத் தகவல் சொல்ல சிறைக்கு செல்கிறான் சுபாகர்.

உண்மையில் அந்த இன்சுலின் ஊசியை மாற்றி வைத்தது யார்..? பாக்யாவிற்குத் தேவையான பணம் கிடைத்ததா..? மிருதுளாக் கொல்லப்பட்ட விபரத்தைப் போலீஸ் கண்டுபிடித்ததா..?

தப்பு செய்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இந்தக் கதையின் கரு.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #nizhalin_niram_sivappu

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=295

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: