
மனிதன் இரசிக்கவே இரவுகள் பிறந்ததோ? அடடே..! எத்தனை அமைதி! இவ்வுலகிலும், என்னுள்ளத்திலும்! காரணம் அவள்தான். தொட்டிலில் படுத்துறங்கும் அளவிற்கு வயதில்லை. இருந்தும் தூக்கம் இல்லாமல் தடுமாறும் போதெல்லாம் தாலாட்டு பாடி கண்ணுறங்க செய்திருக்கிறாள். காலையில் தோன்றும் சூரியனை நான் கண்டதில்லை. காரணம், என்னை அவள் மடியில் இருந்து பிரிக்க அந்த சூரியனுக்கும் விருப்பமில்லை. முதலில் கண்ட முகமும் அவள்தான்; முதலில் நான் காணும் முகமும் அவள்தான். காணும் இடமெல்லாம் அவள் மட்டுமே தெரிந்தாள். நான் யாரென்று அவளிடம் கேட்டால், “விந்தணுவில் வந்த விந்தை” நீ என்பாள். அவள் கூறுவதின் அர்த்தம் அறியேன். பெண் இனத்தைப் போற்ற அவள் தான் காரணமோ என்று பல முறை எண்ணி வியந்திருக்கிறேன்.
அடேய்!! கனவு கண்டது போதும், எழுந்திரி என்று ஓர் குரல். யாருடைய குரலாக இருக்கும்? வேறு யார், என்னை அழைக்கப் போகிறார்கள். அவள்தான் என்னை அழைக்கிறாள். கண்ணை மூடிக்கொண்டே அவள் குரல் ஒலிக்கும் இடத்திற்குச் சென்றேன். காரணம் இன்றுவரை அவளைக் கண்ட பிறகே இவ்வுலகைக் காண்பேன் என்பதற்காக. சரி என்னை பார்த்தது போதும், மணியைப் பார் என்றாள். மங்கியவாறு தெரியும் கடிகாரத்தைத் தொடைத்து விட்டுப் பார்த்தால், மணி 7:30 ஆகிறது. அய்யய்யோ..!! முதல்நாளே தாமதமாகச் செல்வதா..? என்று மனதிற்குள் பேசிக்கொண்டே வினாடி முள்ளுடன் இணைந்து நானும் அவளும் ஓடினோம்.
புத்துணர்ச்சியுடன் 9 ஆம் வகுப்பு முடித்து 10 ஆம் வகுப்பிற்குள் அடி எடுத்து வைத்தேன். இன்று முதல்நாள் என்பதால், வகுப்பில் எதுவும் சுவாரசியமாக நடக்கவில்லை. புத்துணர்ச்சி கொண்டது நான் மட்டும்தான் போல தோன்றியது. வீட்டிற்குச் சென்றேன். பள்ளியில் நடந்தவற்றை அவளிடம் கூறினேன். நாளை முதல் உன் வகுப்பு துவங்கிவிடும்; சலித்துகொள்ளாதே..! என்று என் கண்களைக் கண்டே நான் நினைப்பதைக் கூறினாள் அவள். மறுநாள் வகுப்புக்குச் சென்றபோது, மேலாசிரியர் அறையில் இருக்கும் அண்ணா என்னை அழைத்தார். விழியினை உருட்டிக்கொண்டே அவரின் வழியினைப் பின்தொடர்ந்தேன். அவர் ஓர் அறைக்குள் சென்றார். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்த அறை முழுவதும் புத்தகம் நகர் போல காட்சி அளித்தது. அவர், அதில் சிலவற்றை எடுத்துக்கொண்டு நான் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார். அவை அனைத்தையும் கண்டபோது என்னையே அறியாமல் ஓர் சிரிப்பு வந்தது. இவ்வளோ புத்தகங்களையும் நாம் படித்து விடுவோம் என்று நம்பிக்கொடுப்பவர்களை எண்ணி சிரித்தேன். பிறகு புத்தகங்களை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வகுப்புக்குள் சென்றேன். எல்லா புத்தகத்திலும் என் பெயரினை எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அய்யோ,..அம்மா,.. என்ற அழுகுரல். யாரென்று பார்த்தால் என் வகுப்பில், மூன்றாம் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவி ஒருத்தி, வயிற்றில் கையை வைத்துக்கொண்டு, வலியுடன் கதறினாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் இவ்வளவு பயங்கரமாக இவள் துடிக்கிறாள்? யாரிடம் சென்று வினவுவது..? என்று ஒன்றுமே புரியவில்லை. சரி, ஆசிரியரிடம் கேட்போம் என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாளைக்கு 7 ஆசிரியர்கள் வருகிறார்களே, இவர்களில் யாரிடம் சென்று கேட்பது என்று ஒரு குழப்பம். சட்டென்று வயிறு வலியுடன் சென்ற மாணவியின் அருகில் அமர்ந்திருக்கும் அவளது தோழி, அவளுடைய புத்தகம், Bag, போன்ற அனைத்தையும் எடுத்தாள். இப்போது ஒன்று புரிகிறது. அந்த மாணவி வீட்டிற்கு செல்கிறாள். ஆனால் வயிற்று வலிக்கு மாத்திரை சாப்பிட்டால் போதுமே; என்ன இது ஒன்றுமே புரியவில்லையே. குழப்பத்தில் செய்வதறியாது நின்றேன்.
அப்போது வகுப்பு நேரம் முடிந்தது. பிறகு அடுத்த வகுப்பிற்காக இயற்பியல் (Physics) ஆசிரியர் உள்ளே வந்தார். பாடம் எடுக்கத் தொடங்கினார். புத்தகத்தை மட்டும் திறந்து வைத்துவிட்டு, மாணவி ஏன் துடித்தாள்? என்பதை மட்டுமே என் மனம் யோசித்துக்கொண்டிருந்தது. அப்போது காற்றில் புத்தகத்தின் பக்கம் புரண்டது. அது Female Reproductive Part என்ற தலைப்பில் வந்து நின்றது. அதை நான் கவனிக்கவில்லை. ஆனால் அதை எமன் பார்த்துவிட்டான். எருமையின் மேல் ஏறி என்னை நோக்கி வந்தார், வேறு யாரும் இல்லை, இயற்பியல் ஆசிரியர்தான். அவர் என்னைக் கோவமாக அழைத்து, என்னடா செய்கிறாய்? எந்தப் பக்கத்தை எடுத்து வைத்திருக்கிறாய் என்று சிவந்த கண்களால் என்னைப் பார்த்தார். சிரிப்பாக இருந்தது அவரின் சிவப்பு முகம். சட்டென்று சிரித்து விட்டேன். கோவத்தின் எல்லைக்கு அவரை அனுப்பிவிட்டேன். புத்தகத்தைப் பிடுங்கி வெளியே எறிந்தார். வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் என்னைக் கண்டு சிரித்தனர்.
அவர்கள் சிரிப்பதைக் கண்டுக்கொள்ளாமல், வெளியில் தூக்கி எறிந்த அந்தப் புத்தகத்தை விரைந்து சென்று எடுத்தேன். அப்போதுதான் புத்தகத்தை கவனித்தேன், அந்தப் புகைப்படத்தை முதன் முதலில் கண்டேன். அந்த புகைப்படத்தின் கீழ் Female Reproductive Part என்று எழுதப்பட்டிருந்தது. இது படிப்பதற்குத் தானே இதில் அச்சிட்டுள்ளார்கள், பிறகு ஏன் இவர்கள் என்னை ஏளனமாக காண்கிறார்கள்..? தவறான விஷயத்தில் என் ஆர்வத்தினைச் செலுத்துகிறேனா? என்று என்மேல் எனக்கே சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே குழம்பி இருக்கும் குட்டையில் குச்சியை விட்டு ஆட்டுவது போல ஆகிவிட்டதே என் நிலை. வகுப்பு முடிந்தது. ஆசிரியர் வெளிய வருகிறார். ஆனால் அவர் வருவதும் அறியாமல் வியப்புடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நீயெல்லாம் திருந்தவே மாட்டாய் என்று என் காது கிழியும் அளவிற்குக் கத்திவிட்டுச் சென்றார்.
அதைப் பொருட்படுத்தாமல், என் வகுப்பு மாணவியிடம் அந்தப் புகைப்படத்தைக் காட்டி இது என்னது..? என்று கேட்டேன். அதற்கு அவள், சீ.. சீ.. இதெல்லாம் நான் எப்படி உன்னிடம் சொல்ல முடியும். இது பெண் சம்பந்தப்பட்ட விஷயம். இதெல்லாம் சொல்ல முடியாது. சொன்னாலும் உனக்குப் புரியாது. நீ முதலில் என்னை விட்டு தூரமாகச் செல், என்று முகம் சுளித்துப் பேசினாள். வகுப்பு அனைத்தும் விந்தையாக இருந்தது. மண்டை வெடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
அப்போது ஜன்னலின் வழியாக வந்த மல்லிகை வாசனை, உயிரியல் (Biology) ஆசிரியர் வரும் வாசலைக் காண்பித்தது. முகத்தில் புன்னகையுடன் “வணக்கம் மாணவர்களே” என்று கூறினார். இவர்களிடம் கேட்போமா? இல்லை வேண்டாமா? ஒரே பதற்றம்..! மற்றும் ஓர் குழப்பம். ஆனால் அவர்கள் முகத்தில் குடிகொண்டிருந்த புன்னகை எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. Mam! எனக்கு சிறிய சந்தேகம் உள்ளது என்று அவர்கள் அருகில் சென்று கூறினேன். பாடமே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் உனக்கு சந்தேகமா? என்று கேலியாகக் கேட்டார். பிறகு அந்தப் படத்தைக் காட்டி இது என்ன படம் Mam. இதைப்பற்றிப் பெண்களிடம் ஏன் பேசக்கூடாது என்று கேட்டேன். இதைப் பற்றி இன்னொரு நாள் நான் சொல்கிறேன், நீ சென்று உன் இடத்தில் உட்காரு என்று பதில் அளித்தார். இல்லை Mam! இப்போதே எனக்கு சொல்லுங்கள் என்று கூறினேன். என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா? வெளியில் செல் என்றார். நான் எதற்கு வெளியில் செல்ல வேண்டும், நான் செல்லமாட்டேன் என்று கூற, அவர் கொண்ட கோபத்தால் என் கன்னம் சிவக்க, வகுப்பு அதிரும் அளவிற்கு அறைந்தார் என்னை. பிறகு என்னை இழுத்து வெளியில் தள்ளினார். வகுப்பில் உள்ள அனைவரும் என்னை விசித்திரமாகப் பார்த்தனர். வகுப்பு முடிந்தது. வெளியில் நான் இருப்பதைக் கூட கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்றார் உயிரியல் ஆசிரியர். “ஆர்வத்துடன் தொடங்கிய இரண்டாம் நாள் வகுப்பு, சோகத்தில் முடிந்தது”.
வீட்டிற்குள் சென்றேன், அவள் சமையலறையில் இருந்தாள். அவளிடம் ஒன்றும் பேசாமல், என் அறைக்குள் சென்றேன். அறையின் கதவைப் பூட்டிக்கொண்டேன். கட்டிலில் விழுந்து, கதறி அழுதேன். அறையில் இருக்கும், என் Teddy Bear பொம்மையிடம் வகுப்பில் நடந்ததைக் கூறினேன். “நான் அவற்றைத் தெரிந்துகொள்ளக் கூடாதா? தெரிந்துகொள்ளக் கூடாது என்றால், ஏன் தெரிந்துகொள்ளக் கூடாது..? இதில் ஒரு கேள்விக்கும் எனக்கு விடை கிடைக்கவில்லை. நீயாச்சும் சொல்லேன் என்று எதார்த்தம் உணராமல் பொம்மையிடம் பேசிக்கொண்டிருந்தேன். “டொக்.. டொக்..” கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவள் தான். எனக்காக உணவு எடுத்து வந்திருக்கிறாள் போல, சரி! Teddy Bear இங்க நடந்தத அவளிடம் சொல்லக்கூடாது. சரியா? என்று பொம்மையிடம் கூறிவிட்டு, சிவந்த கன்னத்தை மறைக்க முகம் கழுவி, அதன் மேல் பவுடர் பூசிக்கொண்டு போலியாக சிரித்துக் கொண்டே கதவை திறந்தேன். கதவைத் திறக்க இவ்வளவு நேரமா? என்ன செய்துகொண்டிருந்தாய் என்று பல கேள்விகள் கேட்டாள். அவளுக்கு எந்த பதிலும் நான் கூறவில்லை. மாறாக, போலியான என் சிரிப்பை பதிலாக்கினேன். அவள் என்ன அதிசயம், இன்றைக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறீர்கள். இன்றைய வகுப்பு எப்படி சென்றது என்ற வினாவுடன், என் வாயில் சோற்றுருண்டையைத் திணித்தாள். சிறிய வாயில், விரைவில் மென்று, இன்றைய வகுப்பு சிறப்பு என்று பொய் கூறினேன். “அப்படியா” என்று கேட்டாள், என்ன இது? இவள் கண்டுபிடித்து விட்டாளோ..? என்று உள்ளுக்குள் ஏற்பட்ட குழப்பத்தினை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஆமாம்!! சிறப்பாகத்தான் சென்றது. அதில் உனக்கு என்ன சந்தேகம் என்றேன். சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால்.. என்று இழுத்தாள். இழுக்காதே! என்ன ஆனால்? என்றேன். உன் கன்னம் சிவந்து இருக்கிறது. ஆனால் நீயோ சிறப்பான வகுப்பு என்று சொல்கிறாயே, அதான் சந்தேகத்துடன் கேட்டேன் என்று பதில் அளித்தாள்.
எப்படி அறிந்திருப்பாள்? எனக்கு எல்லாமே தெரியும். நீ என்னைக் கடந்து செல்லும் போதே உன் முகம் வாட்டம் கொண்டதை நான் கண்டேன். என்ன ஆயிற்று சொல் என்றாள். கண்ணீரை அடக்க முடியாமல், அவள் முன் அழுதேன். அழாமல் விஷயத்தை சொல் என்றாள். மனதில் ஓர் பயம். இவளிடம் எப்படி கேட்பது. இவளும் பெண் தானே!!. என்னை மற்றவர்களைப் போல, இவளும் தவறாக எண்ணிவிடுவாளா? என்று மனதிற்குள் பல சிந்தனை கங்கை நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. நாவில் சுரக்கும் அமிலம் சற்று குறைந்தது. நான் உட்கார்ந்து இருக்கும் கட்டில் ஈரமாகிவிடும் அளவிற்கு கொட்டுகிறது எனது வியர்வை. என் இதயத்துடிப்பை Stethoscope இல்லாமலே என் செவிகள் கேட்டன. அடேய்!! சொல்லுனு சொல்றேன்ல.. வகுப்பில் என்ன ஆச்சு? உன் கன்னம் இப்படி சிவக்க காரணம் என்ன?. பதைபதைக்கும் நொடிகள், இல்லாத தைரியத்தை இருக்கிறதென்று நம்பிக்கை கொண்டு, Bag-ல் இருந்த அறிவியல் புத்தகத்தை எடுத்து, அந்தப் புகைப்படத்தைக் காண்பித்து, வகுப்பில் நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினேன். அவள் பதில் என்னை உறையச் செய்தது. இவ்வளோதானா என்று பதில் கூறினாள். என்னடா இது? என்று ஒரே ஆச்சர்யம் எனக்கு. இதை நான் வகுப்பில் கேட்டபோது, என்னை அனைவரும் விநோதமாகப் பார்த்தார்கள். ஆனால் இவளோ, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல பேசுகிறாள். அவளிடம் நான் கேட்டது சரியா? தவறா? விநோதமாக அனைவரும் என்னைக் காண காரணம் என்ன? என்று அவளிடம் தொடர்ந்து வினவினேன். அதற்கு அவள், “மாடு மேய்ப்பவரைக் கேவலமாகவும், நாயுடன் நடப்பவர்களைக் கௌரவமாகவும் கருதுகிறார்கள் இவ்வுலகில்”. நீ முதலில் சாப்பிடு, உன் கன்னத்திற்கு மருந்து போட்டுக்கொண்டே உன் கேள்விக்கு நான் விடை தருகிறேன் என்றாள். இவ்வுலகம் பற்றிய அவளது கருத்து என்றும் விந்தையாகவே இருந்தது எனக்கு. வேகமாக சாப்பிட்டேன். பிறகு சில மருந்தினை என் கன்னத்தில் தடவினாள்.
நான் அவளிடம் இது என்னது..? இந்தப் புகைப்படம் பற்றி நான் தெரிந்துகொண்டால் தவறா..? என்று கேட்டேன். அதற்கு அவள், இது “யோனி” (Vagina) என்றாள். யோனி என்றால் என்ன? அதாவது அவைகள் அந்தரங்க உடல் உறுப்பு. மேலும் ஒன்றுமே புரியவில்லை என்றேன். அதற்கு அவள், இரு நான் விவரமாக அனைத்தையும் சொல்கிறேன் என்றாள். “அம்மாவின் வயிற்றில் கருப்பை (Uterus) இருக்கிறது. நீ பிறப்பதற்கு முன்பே நீ வாழ்ந்த இடம் அதுதான். அம்மாவும் அப்பாவும் உன்னை உண்டாக்கினார்கள். அப்பாவின் உடலில் உள்ள ஓர் செல் விந்து என அழைக்கப்படுகிறது. இது அம்மாவின் உடலுக்குள் இருக்கும் முட்டை எனப்படும் ஒரு சிறிய செல்லுடன் இணைந்து உன்னைப்போன்று அழகான குழந்தையானது. நீ பிறக்கப் போகும்போது, கருப்பை (Uterus) உன்னை அம்மாவின் யோனியிலிருந்து வெளியேற்றியது”. பிறகு மாணவியின் வயிற்றுவலிக்கு காரணம் மாதவிடாய் என்று அவள் எனக்குப் புரியவைத்தாள். பல நாட்களுக்குப் பிறகு இன்றுதான் எனக்குப் புரிகிறது, “விந்தணுவின் விந்தை” என்று என்னை அழைத்ததின் காரணம். அவள் கூறிய அந்த செய்திகள் அனைத்தாலும், எனது சந்தேகமும் முற்றுப்பெற்றது. மேலும் இந்த உலகில் இருக்கும் தவறான எண்ணங்களைப் பற்றியும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிந்துகொண்டேன். அவள் நெற்றியில் முத்தமிட்டுக் கண்மூடி உறங்கினேன் மன நிம்மதியுடன்..
வருடங்கள் ஓடின.. பல பெண்களைக் கடந்து வந்துவிட்டேன். இருந்தும் அவளைப் போல ஒருத்தியைக் கண்டதில்லை. நான் கண்ட ஒருத்தி, பெண் என்ற ஒருத்தி..! “என் அம்மா”….
““பாலியல் உரையாடல்கள் சரியாக நடத்தப்படுவது, குழந்தைகளை அதிக விவேகமானவர்களாகவும், உணர்வுப்பூர்வமிக்கவர்களாகவும் ஆக்குகிறது.”” உதாரணமாக, ஒரு தாய் அவளது பையனுக்கு மாதவிடாயைப் பற்றி கற்பிக்கும் போது, அடுத்தமுறை பள்ளியில் ஓர் வகுப்பில், ஒரு பெண் தனது பாவடையில் மாதவிடாய்க்கான ரத்தக்கறை படிந்தால், அந்த பையன் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கவோ, கேலி செய்யவோ மாட்டான். உண்மையில் சொல்லப்போனால், மற்றவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதை நிறுத்தச் செய்வான். சக வகுப்பு தோழியை சாதாரணமாகவும், வசதியாகவும் உணரச் செய்வான்.
மார்பகத்தை, மார்பகம் என்றே அழைக்க வேண்டும். யோனியை யோனி என்றே அழைக்கவேண்டும். ஒரு ஆண்குறி, ஒரு ஆண்குறி என்று அழைப்பது, சீ.. சீ.. ,, ஷேம்.. ஷேம்.. போன்ற வெட்கக்கேடான வார்த்தைகளால் பேரிடுவது போன்ற சிலவை, தடைகளைப் பெருக்கி, குழந்தைகளுக்கு வெட்கக்கேடான பாரம்பரியத்தைத் தூண்டுகிறது. மாதவிடாய் குறித்து நேர்மறையான எண்ணத்துடன் குழந்தைகள் வளர்க்கப்படவேண்டும். பாலின உணர்திறன் கொண்டவர்களாக குழந்தைகள் வளரவேண்டும். ஆர்வமுள்ளவர்களாகவும் கேலி செய்யப்படாத சூழலில் குழந்தைகள் வளரவும் நாம் வழி செய்ய வேண்டும்.
யார் அந்த நாம்..? இந்த நவீன யுகத்தில் எத்தனை ஆசிரியர்கள், பெற்றோர்கள் குழந்தைகளின் கேள்விக்கு பதில் அளிக்கிறார்கள் என்பதை சிந்தையில் கொண்டு சிந்தித்து செயலாற்றுங்கள்.
– பிரவீன் குமார். வ
#one_minute_one_book #tamil #book #review #short_story #pennondru_kanden
Superb no words to describe…. Young writer 🤩💖 awesome keep doing
Thank You so Much 💕🥰
Urs Daughter :
Vera lvl uh Anna.. 💖😇 keep going like this awesome Anna🤩😍
ஒவ்வொரு வார்த்தைகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது… 💞❣️
Thank You So Much Dear 🥰 Sister
Super anna. 👌nizz tamil …..keep rocking bro😉