சிவப்பு விளக்கு எரிகிறது..!!

புத்தகத்தோட தலைப்பைப் படிச்ச உடனே இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்று வாசகர்களில் நிறைய பேர் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

ஆம்..இந்தப் புத்தகம் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழும் பெண்களைப் பற்றியது தான். அதுவும் வேறு வழியின்றி இந்த இழிதொழிலுக்குத் தள்ளப்பட்ட அபலைப் பெண்களைப் பற்றியது தான்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், வேலை பார்க்கும் இடத்தில் காதல் வலையில் விழுந்த பெண்கள், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதை விடுதிகளில் இருக்கும் பெண்கள், தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் பெண்கள், பெற்றோரை இழந்து உறவினர் வீடுகளில் வேண்டா வெறுப்பாக வளர்க்கப்படும் பெண்கள், கவர்ச்சியினால் கவரப்படும் பெண்கள், பணத்திற்காக பெரு நகரங்களுக்கு கடத்தி விற்கப்படும் பெண்கள், சினிமாவைப் பார்த்து அந்த வாழ்வை வாழ விரும்பி ஏமாறும் பெண்கள், வேலை தேடி பம்பாய்க்குச் சென்ற பெண்கள்..என இந்த வரிசை நீள்கிறது.

“ஒரு பெண்ணைக் கண்ணியமாக உலகில் வாழ விடமாட்டார்களா..?” சிவப்பு விளக்குப் பகுதியில் வாழும் ஒரு பெண் கேட்ட கேள்வி இது. நியாயமான கேள்விதான்.

பெற்றோரை இழந்து உறவினர் வீட்டில் அவர்களின் வெறுப்பில் வாழும் ஒரு பெண், அந்த வீட்டிலிருந்து வெளியேற மணவாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க, அது அவளை இந்த இழிதொழிலுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறது.

ஒரு பெண்..அதுவும் அழகான பெண்ணாக இருந்துவிட்டால், அவளால் இந்த உலகில் பாதுகாப்புடன் வாழவே முடியாது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு உதாரணம்.

குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, சமூகத்தினரால் பழிக்கப்பட்டு இந்த இழிதொழிலுக்கு பெண்கள் வர என்ன காரணம்..? பணக்காரர்களின் பேராசை ஒரு பெண்ணின் வாழ்வை எப்படி மாற்றுகிறது..? காதல் என்னும் போர்வையில் பெண்கள் ஏமாறுவது ஏன்..? குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் ஒரு ஆணிற்கு இன்னொரு பெண் எதற்கு..? ஒரு பெண் தன்னுடைய வயிற்றுப் பசியைப் போக்கிக்கொள்ள நிறைய ஆண்களின் உடல் பசியைத் தீர்க்க வேண்டி இருக்கிறதே அது ஏன்..? ஒருவனால் ஏமாற்றப்படும் பெண்ணைக் காப்பாற்றுவதாகச் சொல்லி திருமணம் செய்யும் வேறொரு ஆண் அவளை உபயோகப்படுத்திவிட்டு நிர்கதியாக விட்டுச் செல்வது ஏன்..?

இந்தப் புத்தகத்தைப் படித்த உடன் ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது..

”சேலை மீது முள் பட்டாலும், முள் மீது சேலை பட்டாலும் சேதாரம் சேலைக்கு தான்”.

பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களைப் பற்றியோ, இல்லை விருப்பப்பட்டு இந்தத் தொழிலுக்கு வந்த பெண்களைப் பற்றியதோ அல்ல இந்தப் புத்தகம். இல்லற வாழ்வை எண்ணிய திருமணமான பெண்கள், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இந்தத் தொழிலுக்கு வந்த கதை தான் இந்தப் புத்தகம்.

மேலும் இன்றளவும் கடவுளுக்கு பெண்ணை நேர்ந்து விடும் “ஜோக்தி” (கிட்டத்தட்ட தேவதாசி முறை) முறையைப் பற்றி விவரித்திருப்பது நம்முடைய மக்களின் அறியாமையையே காட்டுகிறது.

இந்த வாழ்விலிருந்து மீண்டு வாழ விரும்பும் பெண்களை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா..? வேலை கொடுக்குமா..? உணவு கிடைக்குமா..? இப்படிப்பட்ட பெண்களின் இந்த நிலைக்கு இவர்கள் மட்டும் காரணம் அல்ல என்பதை நாம் அறிவோமா..? சில மோசமான ஆண்கள் இருப்பதினால் தான், குடும்பப் பெண்களே இந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்..?

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழும் இந்தப் பெண்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு என்பதை இந்தப் புத்தகத்தின் வழியே உணர்த்தியிருக்கிறார் ஆசிரியர் ஸ்ரீவேணுகோபாலன்.

#one_minute_one_book #tamil #book #review #red_light_area #shri_venugopalan #sivappu_vilakku_erigiradhu

want to buy : https://dialforbooks.in/product/1000000003865_/

One thought on “சிவப்பு விளக்கு எரிகிறது..!!

Add yours

  1. Super.. ❤padikum pothe intha book ah padikanum nu thonuthu… 😇neenga kadhaiya short ah solurathu, athaium ivala intrest ah solurathu semma… 🤩Gud job..👍keep rocking…. 😍

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading