மனோவுடன் விவாகரத்து கிடைத்த சந்தோசத்துடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்த பிரபல நடிகை அனுலேகா, விரைவில் தொழிலதிபர் சுபாஷை மறுமணம் செய்யப் போவதாக பிரஸ் மீட்டில் தெரிவிக்கிறாள். அனுவை நடிகையாக்குவதற்காக அவளின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மனோ தனித்து விடப்பட்டான்.
சுபாஷ் பணத்திற்காகத் தான் அனுவிடம் பழகுவதாக முன்னாள் கணவன் மனோ அவளை எச்சரித்துச் செல்கிறான். சுபாஷின் உண்மையான சுயரூபம் அனுவின் மேனேஜர் மூலமாகத் தெரிய வருகிறது.
அதன் பிறகு, உடன் நடிக்கும் ஹேமந்த்தின் அன்பை புரிந்துகொண்டு அவனுடன் வாழ முடிவெடுக்கிறாள் அனு. இந்நிலையில் இருவரும் ஒரு ரிசார்ட்டில் தங்க, அதை மோப்பம் பிடித்துவிட்ட போட்டோகிராபர்களுக்கு சிக்காமல் இருவரும் காரில் பறக்க, எதிரில் வந்த லாரியில் மோதி ஸ்பாட்டிலேயே உயிரிழக்கிறார்கள் அனுவும் ஹேமந்த்தும்.
அனுலேகா இறந்து ஒரு மாதம் முடிந்திருக்க, கண்கள் நோண்டப்பட்டு கை விரல்கள் பத்தும் வெட்டப்பட்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஆணின் பிணம் ஒன்று போலீசிற்கு கிடைக்கிறது. கொலை செய்யப்பட்ட நபர் முரளி என்ற விபரம் போலீசிற்கு தெரிய வருகிறது. சௌதாமினி என்ற பெண்ணிடம் இருந்து வந்திருந்த கடிதம் ஒன்று முரளியின் சட்டைப்பையில் இருந்து கிடைக்க, அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் தனிப்படை விரைகிறது.
இதற்கிடையில் பிரபல போட்டோகிராபர் நரசிம்மனும் கண்கள் நோண்டப்பட்ட நிலையில் முரளியைப் போலவே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பீச்சில் செத்து கிடக்கிறான். இரண்டு கொலைகளும் ஒன்று போலவே இருக்க கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் திணறுகிறது.
கதையில் திடீர் திருப்பமாக சௌதாமினியை போலீஸ் கண்டுபிடிக்க, முரளி ஒரு ஃப்ரீலான்ஸ் போட்டோக்ராபர் கம் ரிப்போர்ட்டர் என்று அவள் குடுத்த தகவல் போலீசிற்கு சற்று திகைப்பாக இருந்தது. ஃப்ரீலான்ஸ் போட்டோக்ராபராக இருந்த முரளிக்கும், பிரபல போட்டோக்ராபரான நரசிம்மனுக்கும், நடிகை அனுலேகாவின் மரணத்திற்கும் உள்ள தொடர்பே அனு ஓர் ஆச்சர்யம்..
#one_minute_one_book #book #tamil #crime_novel #suspense_book #thriller_novel #rajeshkumar #rajeshkumar_crime_novel #anu_ore_aachiryam #novel_junction #crime_story
Leave a Reply