துப்பாக்கியோடு வந்து வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வளர்மதியைப் பார்த்து சற்று அரண்டு தான் போனார் ஈஸ்வர். பிரபல தொழிலதிபரான ஈஸ்வர் சொந்தப் பணத்தில் வருடந்தோறும் ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் செய்துவைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்.
இப்படிப்பட்ட ஈஸ்வரை வேவு பார்க்க வந்தவள் தான் வளர்மதி. குடும்பத்திற்கும் கணவர் ஹரிக்கும் தெரியாமல் போலீஸ் இன்பார்மராக இருப்பவள். தைரியசாலியான வளரின் சிறுவயது போலீஸ் கனவு நிறைவேறாத காரணத்தால் மறைமுகமாக கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு கீழே இப்போது இன்பார்மராக வேலை செய்து வருபவள்.
ஈஸ்வர் செய்தது நல்ல விஷயம் தானே இதில் வேவு பார்க்க என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ பதில்..நான்கு வருடத்திற்கு முன்பு ஈரோட்டில் ஈஸ்வர் நடத்தி வைத்த இலவசத் திருமண ஜோடிகளில் மூணு ஜோடிகளும், இரண்டு வருடத்திற்கு முன்பு அவினாசியின் நடத்தி வைத்த இலவசத் திருமணத்தில் இரண்டு ஜோடிகளும் தற்கொலை செய்துகொண்டது தான்.
தற்கொலை செய்து கொண்ட பத்து பேரும் ரிசின் என்ற விஷத்தை சாப்பிட்டு இறந்திருந்தனர். இது போலீசிற்கு சந்தேகத்தை கிளப்பியிருந்தது. மேலும் இறந்த ஐந்து பெண்களும் மூன்று மாத கர்ப்பிணிகள் என்பது திடுக்கிடும் தகவலாக இருந்தது.
ரிசின் என்ற விசத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள டாக்ஸிகாலஜி டிபார்ட்மென்ட்டில் வேலை பார்க்கும் கல்லூரித் தோழன் மனோஜை சந்திக்க செல்கிறாள் வளர்மதி. மனோஜும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த கறுப்பு ஆடு என்பது தெரியாமலேயே.
இதற்கிடையில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் படிப்பறிவு இல்லாத தன்னுடைய தம்பி ஜெனிடிக்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்ததாகக் கூறிய இறந்து போன ஒரு ஜோடியின் அண்ணன் போலீசைக் கலவரப்படுத்துகிறான்.
இந்நிலையில் தமிழ்நாட்டுப் போலீசாரால் முடிக்க முடியாத முக்கியமான ஏழு கேஸ்களை முடித்து வைக்க டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்து சில்பா என்ற பெண் சிபிஐ தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். தோழி நர்மதாவின் வீட்டில் தங்கி கேஸை ரிசர்ச் செய்து கொண்டிருந்த சில்பா ஒருநாள் திடீரென காணாமல் போகிறாள்.
சில்பாவைப் பற்றி விசாரிக்க நர்மதாவின் வீட்டிற்குச் சென்ற வளர்மதியின் பார்வையில் அந்த இரிடியம் போன் தென்படுகிறது. இந்த இடத்தில் நர்மதாவின் மேல் தன்னுடைய சந்தேகப் புள்ளியை வைக்கிறாள் வளர். ஆனால், எதிர்பாராத விதமாக நர்மதாவும் ஒருநாள் போலீஸிடம் இருந்து தப்பித்துச் செல்கிறாள்.
மர்மமான முறையில் இறந்து போன அனைவரும் ஏதோ ஒரு ஆராய்ச்சிக்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வளர்மதிக்கு வருகிறது. வளர்மதியின் ஒவ்வொரு அசைவையும் ஈஸ்வருக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிறான் மனோஜ். இதற்கு நடுவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு எதிரிகளால் வளர்மதி கடத்தப்படுகிறாள்.
மனோஜும் ஈஸ்வரின் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதை கமிஷனர் கண்டுபிடித்த அடுத்த நிமிடம் துரதிர்ஷ்டவசமாக அவன் கொல்லப்படுகிறான். இந்த கணமே ஈஸ்வரின் கேஸில் இருந்து விலகுமாறு மேலிடத்தில் இருந்து கமிஷனருக்கு உத்தரவு வருகிறது.
போலீஸ் இன்பார்மராகத் தன் மனைவியை சந்தோசமாக ஏற்றுக்கொண்ட ஹரி, வளர்மதியைத் தேட ப்ரைவேட் டிடெக்டிவின் உதவியை நாடினான். மேலிட உத்தரவையும் மீறி மேற்கொண்டு ஈஸ்வரின் விசயத்தில் ஈடுபட்டதால் கமிஷனர் திரிபுரசுந்தரி சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.
கடத்தப்பட்ட வளர்மதி ஒரு ஃபார்ம் ஹவுஸில் கண்விழிக்க, அங்கே ஈஸ்வர் தன்னுடைய மகன் மற்றும் அமெரிக்காவில் இருந்து ஜான் மில்லருடன் அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள காத்திருக்க…?!
“விபரீதங்கள் இங்கே விற்கப்படும்” நாவலை இலவசமாகப் படிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக்கவும்..
https://tamil.oneindia.com/topic/rajesh-kumar-crime-novels?page-no=4
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vibareethangal_inge_virkappadum
Leave a Reply