காரில் இறந்து கிடந்த அமைச்சர் கார்மேகவண்ணனைப் பார்த்ததும் ரிப்போர்ட்டரான பாரி திடுக்கிட்டான். உள்ளே அமைச்சரின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடந்துகொண்டிருக்க, சக ரிப்போர்ட்டரான நிருபமாவிடம் தான் பார்த்த நிஜத்தை கலக்கத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான் பாரி.
பிறந்தநாள் இறந்தநாளாக மாற, அமைச்சரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி. ‘அமிர்தம் என்றால் விஷம்’ என்ற எழுத்துக்கள் அமைச்சரின் முதுகில் பச்சை குத்தப்பட்டிருந்தது.
கார்மேகவண்ணனின் மகன் செழியனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் கிடைக்காமல் போகவே, கேஸை வேறொரு கோணத்தில் இருந்து கொண்டு செல்ல நினைக்கிறது போலீஸ். ரிப்போர்ட்டர் நிருபமா கொடுத்த தகவலின் படி, கன்னட நடிகை அமிர்தம்மாவிற்கும் கார்மேகவண்ணனுக்கும் உள்ள தொடர்பை போலீஸ் கண்டுபிடிக்கிறது.
கொலையாளி அமிர்தம் இல்லை என்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறது. தந்தையின் காரியங்களை அப்போது தான் முடித்துவிட்டு வந்த செழியனுக்கு ஒரு ஃபேக்ஸ் செய்தி காத்திருந்தது. அடுத்ததாக அவனுக்கும் நாள் குறிக்கப்பட்டிருப்பதாக வந்திருந்த செய்தியைப் பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தான் செழியன்.
ஃபேக்ஸ் விசயத்தை செழியன் போலீசிற்கு கொண்டு செல்ல, செண்பகவல்லி என்ற பெண் தான் ஃபேக்ஸ் அனுப்பியது என்ற விபரம் போலீசிற்கு கிடைக்கிறது. இந்நிலையில் பலான தொழில் செய்யும் செண்பகவல்லியை விசாரிக்கச் சென்ற போலீசிற்கு அவளுடைய பிணம் மட்டுமே கிடைத்தது. அவளது உடலிலும் அமிர்தம் என்றால் விஷம் என்ற எழுத்துக்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தது.
மிரட்டல் விடுத்த பெண் இறந்த நிலையில் வேறொரு நபர் செழியனைக் கொலை செய்ய முயற்சிக்க அவன் கோமாவில் விழுகிறான். கதையில் திடுக்கிடும் திருப்பமாக முதலமைச்சர் திருஞானத்தின் மருமகன் கணேஷபாண்டியன் ஒரு நடிகையின் வீட்டில் வைத்தே கொலை செய்யப்படுகிறான். அவனுடைய முதுகிலும் அதே பச்சை.
ஹாஸ்பிடலில் இருந்த செழியனை யாரோ கடத்திச் செல்ல, அவனுடைய பெட்டில் வேறொரு நபர் அதே முறையில் பச்சை குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறான். கொதித்தெழுந்த முதலமைச்சர் நடந்த சம்பவங்களுக்கெல்லாம் காரணம் தேவானந்தா ஸ்வாமிகளின் ஆசிரமம் தான் என்பதை விசாரணையின் வழியாக அறிகிறார்.
செல்வாக்கு பெற்ற தேவானந்தா ஸ்வாமிகளை வேவு பார்ப்பதற்காக மகள் ஸ்ருதியை அந்த ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர். ஆனால், அவரே எதிர்பாராத விதமாக தேவானந்தா ஸ்வாமிகளும் அதே பாணியில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார். கேஸின் எல்லாப் பக்கமும் இருட்டு தெரிய, கொலையாளி வெளியே வந்தானா..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #amirtham_endraal_visham
want to buy : https://www.amazon.in/Amirtham-Endraal-Visham-Tamil-Rajesh-ebook/dp/B01MG8JXWB

Leave a Reply