இருவேறு உலகம் கதையில் இல்லுமினாட்டி கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் உடல் கருகி இறந்த விஸ்வம், போதையினால் இறந்துகொண்டிருந்த வேறு ஒருவனின் உடலில் புகுவது போல ஆரம்பித்திருக்கும் இந்தக் கதை. கதையின் ஆரம்பமே விறுவிறுப்பைக் கூட்டி ஊடு சடங்கு பற்றியும், உயிர் கூடுவிட்டு கூடு பாய்வதைப் பற்றியும் புதுப்புதுத் தகவல்களுடன் படிப்பவர்களின் மனதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்.
அதீத போதையின் காரணமாக நரம்புகள் செயலிழந்து இறந்துகொண்டிருந்த ஒருவன் திடீரென மருத்துவர்களே எதிர்பாராத வகையில் உயிர் பிழைக்கிறான். அதே வேளையில் மருத்துவமனையில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்தும் செல்கிறான். அவன் உயிர் பிழைத்ததற்குக் காரணம் ஒரு இசை..!
அவன் வேறு யாரும் இல்லை..இருவேறு உலகத்தில் நாம் பார்த்த அதே விஸ்வம் தான்.
போதையால் செயலிழந்த வேறு உடலில் இருப்பதனால் அவனுடைய சக்திகளை உபயோகப்படுத்த முடியாமல் இருக்கிறான் விஸ்வம். ஆனால், கூடிய விரைவிலேயே தன்னுடைய பெயர் தெரியாத ஜிப்ஸி நண்பனின் உதவியால் இழந்த சக்திகளை வசப்படுத்தப் போகிறவன்.
இல்லுமினாட்டி தலைவர் எர்னெஸ்டோவைக் கொன்றுவிட்டு அந்த இடத்தை அடைவதற்காகத் திட்டம் தீட்டுகிறான் விஸ்வம். இந்த முறை வித்தியாசமாக எர்னெஸ்டோவின் பாதுகாப்புக்காக (இல்லுமினாட்டி உறுப்பினராக இல்லாத வெளியாளை இரண்டாவது முறையாக; முதல் முறை க்ரிஷ்) அமானுஷ்யனை வரவழைக்கிறது இல்லுமினாட்டி உளவுத்துறை.
ம்யுனிக்கில் இருந்த க்ரிஷ்ஷை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப, சிந்து என்ற பெண்ணை அவனுடைய குடும்பத்திற்குள் நுழைக்கிறான் விஸ்வம். சிந்துவின் மூலமாக க்ரிஷ்ஷின் அண்ணன் உதய்யின் உயிருக்கு உலை வைக்கிறான் விஸ்வம்.
விஸ்வத்தின் கணிப்புகளை முன்கூட்டியே அறிந்திருந்த க்ரிஷ் திட்டத்தை முறியடித்தானா..? எர்னெஸ்டோவின் காவலுக்கு வந்த அமானுஷ்யனால் அவரைக் காப்பாற்ற முடிந்ததா..? விஸ்வத்தின் கூட்டாளி யார்..? என்பது போன்ற விடை தெரியா பல கேள்விகளுக்கு என்.கணேசன் அவர்களின் வலைப்பூ பதிலாக அமையும்.
தொடர்ந்து அவருடன் பயணிக்க கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்..
http://enganeshan.blogspot.com/2019/06/1.html
ஆசிரியரைப் பற்றி சில வரிகள்..
கோயம்புத்தூரில் விஜயா வங்கியில் அக்கவுண்ட்டிங்கில் பணிபுரிந்து வரும் என். கணேசன் அவர்கள் சிறுகதை, ஆன்மிகம், தன்னம்பிக்கை, அமானுஷ்யம் போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
மனிதன் எண்ணிப்பார்க்காத சில எல்லைகளை வைத்து இவர் எழுதியுள்ள புத்தகங்கள் படிப்பவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக் கூடியவை.
அமானுஷ்யன், புத்தம் சரணம் கச்சாமி, பரமன் இரகசியம், மனிதரில் எத்தனை நிறங்கள், இருவேறு உலகம், விதி எழுதும் விரல்கள், சத்ரபதி, நீ நான் தாமிரபரணி, யாரோ ஒருவன் நாவல்கள் அவருடைய வலைப்பூவில் இலவசமாகக் கிடைக்கின்றன.
இவற்றில் பாதி புத்தகங்கள் ஏற்கனவே நம்முடைய வலைப்பூவில் பதிவாக உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்..
#one_minute_one_book #tamil #book #review #amanushyan #illuminati #n_ganesan
want to buy :
Leave a Reply