ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது..?! – Crime Novel

பிறந்த வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு அன்று அதிகாலை தங்கை விஜயாவுடன் வந்து சேர்கிறாள் தாரிகா. நான்கு நாட்களுக்கு முன்பே கணவன் புஷ்பராஜ் வேலை விஷயமாக திருவனந்தபுரம் செல்வதாக தாரிகாவிற்குத் தகவல் தந்து விட்டுச் செல்கிறான்.

தன்னிடமிருந்த சாவியை உபயோகித்து பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்த தாரிகா, சுவரில் இருந்த ரத்தத் துளிகளைப் பார்த்துத் திகைத்தாள். போலீசிற்குத் தகவல் தெரிவித்த அவள், கலக்கத்துடன் காத்திருந்தாள். ரத்தத் துளிகளைத் தொடர்ந்து சென்ற போலீஸ், வீட்டிற்குப் பின்புறம் தோட்டத்தில் மண் இளகியிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.

இளகியிருந்த மண்ணைத் தோண்ட நிர்வாணமாக இருந்த ஒரு பெண்ணின் பிணமும், அதற்கு கீழே ஆணின் பிணமும் கிடைக்கிறது. பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் நடந்த இந்த விபரீதத்தை எண்ணி தாரிகா பெரிதும் அதிர்ச்சி அடைந்தாள். இங்கிருந்து கதைக்குள் விவேக் நுழைகிறான்.

புஷ்பராஜின் மேல் சந்தேகப்புள்ளியை வைத்த விவேக், அவனைப் பற்றி விசாரிக்க அவனுடைய ஆபிஸ் செல்ல, லலி என்ற பெண் எழுதிய ஒரு கடிதம் விவேக்கிற்கு கிடைக்கிறது. புஷபராஜ் காணாமல் போன இரவு வெகுநேரம் அவன் ஆபிசில் இருந்த தகவல் வாட்ச்மேன் மூலமாகத் தெரிய வருகிறது.

மேலும் ஆபிசை விட்டு புஷ்பராஜ் கிளம்பிய சில மணிகளிலேயே அவனைத் தேடிக்கொண்டு ஒரு கணவன்-மனைவி ஆட்டோவில் வந்து சென்றதாக வாட்ச்மேன் கூறுகிறான். இதற்கிடையில் புஷ்பராஜிற்குக் கடிதம் எழுதிய லலி என்கிற லலிதா ரேணுவும் அவளுடைய கணவன் கோபாலகிருஷ்ணனும் காணாமல் போக, கேஸ் ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து நிற்கிறது.

மிகுந்த சிரமத்துக்கிடையில் லலிதா ரேணுவின் வீட்டைக் கண்டுபிடித்த விவேக், மாஜிஸ்திரேட் உத்தரவுடன் அந்த வீட்டைத் திறக்கிறான். கோபாலகிருஷ்ணனின் அலுவலக அறையில் நீரஜா என்ற பெண் எழுதிய காரசாரமான கடிதம் விவேக்கிற்குக் கிடைக்கிறது.

வீட்டை சோதனை போட்டுக்கொண்டிருந்த விவேக்கை அங்கிருந்த தொலைபேசி அழைக்க, போனின் மறுமுனையில் பேசிய பெண்ணின் குரல் பதட்டத்துடன் பேசி வைக்கிறது. அந்தப் பெண்ணை சந்தேகித்த விவேக் விலாசத்தைக் கண்டுபிடித்து விசாரிக்க செல்ல, நீரஜாவின் அம்மா அவள் என்பது தெரிய வருகிறது.

இந்நிலையில் காணாமல் போன புஷ்பராஜ் தலையில் கட்டுடன் திரும்ப வருகிறான். திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய புஷ்பராஜை போலீஸ் விசாரணை என்ற பெயரில் மர்ம கும்பல் கடத்திச் சென்றதாகவும், தன்மீது கொலை முயற்சி நடந்ததாகவும் அவன் வாக்குமூலம் குடுக்கிறான்.

கோபாலகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதிய பிரபலமாகாத நடிகையான நீரஜா, திடீரென உடன் வேலை செய்பவனைத் திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு வருகிறாள். வரிசை கட்டி வந்த பிரச்சனையின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ, புஷ்பராஜின் வீட்டில் இருந்த பிணம் லலிதா-கோபாலகிருஷ்ணன் என்று நினைத்திருந்த விவேக்கிற்கு மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இருவரும் திரும்ப வருகின்றனர்.

காணாமல் போன ஒவ்வொருவராகத் திரும்ப வர, புஷ்பராஜிற்கு லலி என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் அவனைப் பழியில் சிக்கவைக்க எழுதப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்த விவேக், அவனுடைய ஆபிசிற்குச் சென்று விசாரிக்க, அங்கே குற்றவாளி சிக்குகிறான்.

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading